ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ரயில் முன்பதிவு பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து பிடிக்கப்பட்ட சேவை வரியை ஒருவர் போராட்டி திருப்ப பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் சுஜித் சுவாமி. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோட்டாவிலிருந்து டெல்லி செல்வதற்கு கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இவரது டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தது. இதனால் சுஜித் அந்த டிக்கெட்டை ஜூலை 2ஆம் தேதி ரத்து செய்தார். இதனையடுத்து அவருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.765 லிருந்து ரூ.665 திரும்பி கிடைத்தது.
பொதுவாக காத்திருப்போர் பட்டியலிலுள்ள பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டால் 65 ரூபாய் கட்டணத்திலிருந்து கழிக்கப்படுவது வழக்கம். இதற்கு மாறாக சுஜித்திற்கு 100 ரூபாய் கழிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுஜித் ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டார். அதற்கு அதிகாரிகள் பணம் திருப்பியளிக்கப்படும் எனத் தெரிவித்தனர். அத்துடன் இந்தக் கூடுதல் தொகை சேவை வரிக்காக பிடிக்கப்பட்டது எனத் தெரிவித்தனர். ஆனால் ரயில் டிக்கெட்டிற்கு சேவை வரி 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் தான் விதிக்கப்பட்டிருந்தது. சுஜித் ஏப்ரல் மாதத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதனால் அவர் ஐ.ஆர்.சி.டி.சிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் விண்ணப்பத்திருந்தார்.
இதற்குப் பதலளித்த ஐ.ஆர்.சி.டி.சி, “ரயில்வே துறையின் சுற்றறிக்கை 43-ன் படி ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு முன்னால் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரி விதிப்பிற்குப் பிறகு ரத்து செய்யப்பட்டால் அதற்கு சேவை வரி பணம் திரும்பி தரப்பட மாட்டாது. இதனால் உங்கள் டிக்கெட் தொகையிலிருந்து 65 ரூபாய் ரத்து செய்ததற்கும், 35 ரூபாய் சேவை வரியாக பிடித்தம் செய்யப்பட்டது. எனினும் ரயில்வே துறை 2017ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு சேவை வரி திருப்பி தரப்படும் என புதிய முடிவை எடுத்துள்ளது. இதனால் உங்களுடைய 35 ரூபாய் திருப்பி தரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இம்மாதம் 1ஆம் தேதி சுஜித்தின் வங்கி கணக்கில் 33 ரூபாய் திருப்பி செலுத்தப்பட்டது. எனினும் 35 ரூபாய்க்கு பதிலாக 33 ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் இரண்டு ரூபாய் திரும்ப பெற வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்துள்ள தகவலில் இது போன்று 9 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து மொத்தமாக 3.34 கோடி ரூபாய் பணம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.