மேற்கு வங்கம் மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே மீண்டும் கடும் மோதல் வெடித்துள்ளது.
தற்போது தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக உள்ள பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை சனிக்கிழமை கைது செய்தது. அமைச்சருக்கு உதவியாளர் என்றும் நெருக்கமானவர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அற்பிதா முக்கர்ஜி என்பவரது இல்லத்திலிருந்து 21 கோடி ரூபாய் ரொக்கமும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பிடிபட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் இருவரது கைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெரிய பெட்டிகளில் நிரப்பி ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லும் அளவுக்கு கணக்கில் வராத ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 24 மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்ற விவகாரத்தில் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவரை சிபிஐ ஆசிரியர்கள் நியமன ஊழல் குறித்து விசாரணை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பார்த்தா சட்டர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஊழல் நடைபெற்ற காலக்கட்டத்தில் அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார் என அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி அமலாக்கத் துறையை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதாக மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்களின் மீது இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் சிலர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கைப்பற்றப்பட்டுள்ள 21 கோடி ரூபாய் ரொக்கம் யாருடையது என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க அரசு ஊழலில் திளைத்து வருகிறது என்றும் கைப்பற்றப்பட்ட பணம் மொத்தமும் கையூட்டாகப் பெறப்பட்ட பணம் எனவும் அந்த கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. சிபிஐ இந்த வழக்கில் விசாரணை நடத்த முயற்சி செய்தபோது அதற்கு ஒத்துழைக்காமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டது எனவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
ஊழல் நடைபெறவில்லை என்றும் விசாரணை முடிவுக்கு வராமலே பார்த்தா சட்டர்ஜி குற்றவாளி என சித்தரிக்கப்படுவது தவறு எனவும் மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி தலைவர்களிடையே மீண்டும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த மோதல் போராட்டங்களாக வெடிக்கலாம் என மேற்கு வங்க அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். அற்பிதா முகர்ஜி மம்தா பானர்ஜிக்கும் நெருக்கமானவர் எனவும் பொதுக்கூட்டங்களிலே மேற்குவங்க முதல்வர் பேசிய போது, அற்பிதா முகர்ஜி மேடையில் இருந்ததே இதற்குச் சான்று எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்காக திரட்டப்பட்டது கைப்பற்றப்பட்ட 21 கோடி ரூபாய் எனவும் எந்த அளவுக்கு மேற்கு வங்கத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பதை இது காட்டுவதாகவும் அவர்கள் சாடி வருகின்றனர்.
-கணபதி சுப்ரமணியம்
இதையும் படிக்கலாமே: விமானத்தில் பயணிக்கு திடீர் மயக்கம் - முதலுதவி அளித்த தமிழிசை சவுந்தரராஜன்