பட்டேலுக்கு போட்டியாக ராஜஸ்தானில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை
குஜராத்தில், 3000 கோடி ரூபாய் செலவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
351 அடி உயரமுள்ள சிவன் சிலை நாத்வராவின் கணேஷ் தெக்ரி பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இடம் உதய்ப்பூர் நகரில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. 20 கிமீ தொலைவில் இருந்து இந்த சிலையை பார்க்க முடியும். 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தச் சிவன் சிலை திறக்கப்பட உள்ளது.
பட்டேலின் ஒற்றுமையின் சிலை, புத்தர் சிலை, லாய்கிய்ன் சில ஆகியவற்றை அடுத்து இந்தச் சிவன் சிலை உலகின் நான்காவது பெரிய சிலையாக இருக்கும். கடந்த நான்கு வருடங்களாக சுமார் 750 பணியாளர்கள் இந்தச் சிலை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 2012 ஆகஸ்ட் மாதம், காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் ஆன்மீக தலைவர் மொராரி பப்பு ஆகியோர் இதற்கு அடிக்கல் நாட்டினார்.
இதனிடையே, ஐதராபாத்தில் 1000 கோடி ரூபாய் செலவில் வைஷ்ணவ ஆன்மீக தலைவர் ஸ்ரீராமானுஜருக்கு சிலை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.