பாகிஸ்தானியா, இஸ்லாமியரா..? - ரியானாவின் மதத்தை கூகுளில் தேடிய இந்தியர்கள்!

பாகிஸ்தானியா, இஸ்லாமியரா..? - ரியானாவின் மதத்தை கூகுளில் தேடிய இந்தியர்கள்!
பாகிஸ்தானியா, இஸ்லாமியரா..? - ரியானாவின் மதத்தை கூகுளில் தேடிய இந்தியர்கள்!
Published on

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான பாப் பாடகி ரியானா வைரல் ட்வீட்டுக்கு பிறகு, இந்திய நெட்டிசன்கள் பலரும் அவரது மதம், பின்னணி குறித்து கூகுளில் வெகுவாகத் தேடியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியானா தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

பாப் பாடகி ரியானா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்தான் தற்போது இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அவரது ட்வீட் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. அவரைத் தொடர்ந்து சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், மியா கலிஃபா, கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். எனினும், இவர்களுக்கு இந்திய பிரபலங்கள் சச்சின் முதல் கங்கனா வரை பதில் கொடுத்து வருகின்றனர்.

பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன், கரண் ஜோஹர் மற்றும் அக்‌ஷய் குமார், மற்றும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் அனில் கும்ப்ளே போன்றோர் இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிரான "பிரச்சாரத்திற்கு" எதிராக ஒற்றுமையாக நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தச் சூழலில், ரியானாவை குறிவைத்து நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். எதிர்ப்பாகவும், அவருக்கு ஆதரவாகவும் கருத்துகள் வெளியிடப்பப்பட்டு வருகின்றன. இதனால், ரியானா நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆனார். பலர் ரியனா குறித்து முதல்முறை அறிவதால், அவர் குறித்த விவரங்களை இணையங்களில் தேடி இருக்கின்றனர்.

ரியானா யார் என்ற வழக்கமான தேடல்களுக்கு மத்தியில், ரியானா எந்த மதத்தைச் சேர்ந்தவர், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரா என்ற நெட்டிசன்கள் தேடி உள்ளதாக கூகுள் ட்ரெண்ட்ஸ் தெரிவித்துள்ளது. இதைவிட ஒருபடி மேலாக, ரியானா பாகிஸ்தானியரா என்றும் நெட்டிசன்கள் தேடியுள்ளனர். 'Is Rihanna Muslim?' and 'Rihanna religion', 'Is Rihanna Pakistani?' என்று வாக்கியங்கள் நேற்று அதிகமாக தேடப்பட்டதாகவும் கூகுள் ட்ரெண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com