”மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், மணீஷ் சிசோடியாவுக்கு அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்” என்று இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதற்காகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் பணம் பறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 10) அவர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சந்திரசேகரை மார்ச் 18 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், மணீஷ் சிசோடியாவுக்கு அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார். இந்த ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சுகேஷ் சந்திரசேகர் இப்படி குற்றச்சாட்டு வைப்பது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே கடந்த காலங்களில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு, சுகேஷ் சந்திரசேகர் எழுதியிருந்த கடிதத்தில், ”நாடாளுமன்ற மாநிலங்களை சீட் தருவதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிடம் 50 கோடி ரூபாய் வாங்கியதாகவும், சிறையில் வசதிகள் கிடைக்க, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் 10 கோடி ரூபாய் பெற்றதாகவும் தெரிவித்து இருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் முன்னாள் விளம்பரதாரரான மல்விந்தர் சிங்கிற்கு ஜாமீன் ஏற்பாடு செய்வதற்காக அவரது மனைவி ஜப்னா சிங்கிடம் ரூ.3.5 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அதுபோல் மல்விந்தரின் சகோதரரும், ரெலிகேர் நிறுவனங்களின் முன்னாள் விளம்பரதாரருமான ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கையும் ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. அதிதி சிங்கிடம் இருந்து சுமார் 200 கோடி ரூபாய் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
- ஜெ.பிரகாஷ்