புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த கருத்து வாக்கு வங்கி அரசியலை மையப்படுத்தியது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி ஒன்றில், ''புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துவிட்டு, மறுபுறம் லட்சுமி தேவி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகளில் இரு தெய்வங்களின் உருவங்கள் இருப்பது நாடு செழிக்க உதவும். நாம் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய முயற்சிகளுக்குப் பலன் இருக்காது. இது குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதவிருக்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கள் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில் அவரின் இத்தகைய கருத்து வாக்கு வங்கி அரசியலை மையப்படுத்தியது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் அனீஸ் சோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''லெட்சுமி மற்றும் கணேஷ் ஆகியோரால் செழிப்பை கொண்டு வர முடிந்தால், நாம் இன்னும் செழிப்பை பெறுவதை உறுதி செய்ய, அல்லாஹ், இயேசு, குருநானக், புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோரின் படங்களையும் சேர்க்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி சந்தீப் தீட்சித் கூறுகையில், ''ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் 'பி' டீம்தான் அரவிந்த் கெஜ்ரிவால். அது அவருடைய வாக்கு வங்கி அரசியல். அவர் பாகிஸ்தானுக்கு சென்றால், நானும் பாகிஸ்தானியன்; எனவே எனக்கு வாக்களியுங்கள் என்றுகூட அவர் சொல்வார்'' என தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: "ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படத்தை சேர்க்க வேண்டும்"- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்