இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியுடன் லட்சுமி, விநாயகர் படங்களையும் இடம்பெறச் செய்யலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கூறியிருந்த நிலையில், அவரைத் தொடர்ந்து பலரும் இந்திய ரூபாய் நோட்டு குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.
கெஜ்ரிவால் கூறியது என்ன?
”இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துடன் லட்சுமி, விநாயகரின் படங்களும் இருக்க வேண்டும். அப்போது தான் இந்தியப் பொருளாதாரம் மேம்படும்” என இந்தோனேசியாவை உதாரணமாக சுட்டிக் காட்டி கருத்து தெரிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் பதிலடி கொடுத்து வந்தனர். இதற்கு காங்கிரஸ் தலைவர் சல்மான் சோஸ், ”ரூபாய் நோட்டுகளில் விநாயகர், மாதா லட்சுமியின் படங்கள் இடம் பெற்றால் செழிப்பு ஏற்படும் என்றால் அப்போ அல்லா, ஏசு, குருநானக் ஆகியோரையும் சேர்க்க வேண்டும்.” என கிண்டலடித்தார்.
"புதிய கரன்சி நோட்டுகளில் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் படத்தை ஏன் வைக்கக்கூடாது? அகிம்சை, ஜனநாயகம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்திய இந்திய மேதைகள் ஒரே இடத்தில் இப்படி இணைவது மிகச் சிறப்பானதாக இருக்கும்’’ என மணீஷ் திவாரி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம் தான். ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவி படம் இடம் பெறலாம் என்ற கருத்தில் தவறு இல்லை. ஆனால் பலரும் ரூபாய் நோட்டுகளில் பல தெய்வங்களின் படங்களை இடம் பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பும்” என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கும், காங்கிரஸ் தலைவர்களின் பதிலுக்கும் மெளனம் காத்து வந்தது பாஜக. தற்போது, பாஜக தலைவர் நிதிஷ் ரானே, ‘ தனது ட்விட்டர் பக்கத்தில் சத்ரபதி சிவாஜியின் படத்துடன் கூடிய 200 ரூபாய் நோட்டை எடிட் செய்து, ’இது தான் சிறப்பாக இருக்கும்’ என்று பதிவிட்டு உள்ளார்.