டெல்லியில் ஜாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, பல்வேறு மாணவர் அமைப்பினர் டெல்லி காவல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதைக் கண்டித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இதேபோல அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போதும் தடியடி நடத்தப்பட்டது. மாணவர்களை தாக்கிய காவலர்களை கண்டித்து டெல்லி காவல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாணவர் அமைப்பினர் விடிய விடிய போராட்டம் நடத்தினர். காவல் துறை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இரவு 9 மணிக்கு தொடங்கிய போராட்டம், அதிகாலை 3 மணி வரை நீடித்தது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த காவல் துறை செய்தி தொடர்பாளர் கைதான மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்கவும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கவும் டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மாலை 3 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள ஆணையம், தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
முன்னதாக, ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மும்பை, ஹைதராபாத் நகரங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மும்பை ஐஐடி மாணவர்கள் தீப்பந்தங்களை ஏந்தியபடி பேரணியாக சென்று, மாணவர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். ஹைதராபாத்தில் மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழக மாணவர்களும் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.