நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணியின் இருக்கையில் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்பவர் மது போதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிரிந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் பெங்களூருவில் பதுங்கியிருந்த ஷங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்த பரப்பரப்பே அடங்காத நிலையில் துபாயில் இருந்து டெல்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தில் அதேபோன்று பெண் ஒருவருக்கு போதையில் பயணித்த இந்தியரால் தொல்லை ஏற்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட உபாசனா என்ற பெண்ணே ட்விட்டரில் தனக்கு நடந்ததை பதிவிட்டிருக்கிறார்.
அதில், “துபாயில் இருந்து டெல்லி வருவதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் நடைபாதையில் இருக்கும் இருக்கையை (aisle seat) புக் செய்திருந்தேன். அப்போது ஒருவர் வந்து என்னை நடுவில் இருக்கும் இருக்கைக்கு மாறச் சொன்னார்.. நான் முடியாது என்று மறுத்தேன்.
அதற்கு அந்த நபர், ‘நீங்கள் பெண். ஆகையால் உள்ளேதான் உட்கார வேண்டும்’ என இந்தியில் சொன்னார். அப்போதும் சீட்டை மாற்றிக்கொள்ள மறுத்தேன். அதற்கு, ‘நடு இருக்கையில் இருந்து நான் குடி போதையில் இருந்தால் என்னை குறை சொல்லாதீர்கள்’ என்றார். அவர் இந்தியில் பேசியதால் விமான ஊழியர்களுக்கும் புரிந்திருக்கவில்லை.
சீட்டை மாற்றவே மாட்டேன் என உறுதியாக கூறியும், அந்த நபர் முன்னிலையிலேயே என்ன வேறு இடத்துக்கு மாறும்படி விமான ஊழியர்கள் கேட்டார்கள். ஆனால் நான் பணம் கட்டியிருக்கும் இடத்தில்தான் அமர வேண்டும் என்றிருந்தேன். இருப்பினும் எமிரேட்ஸ் ஊழியர்கள் என்னிடம் இது குறித்து விசாரிப்பதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் எதுவுமே செய்யவில்லை.
மாறாக எனக்கு வேறு இருக்கையே வழங்கப்பட்டது. அதேவேளையில் போதையில் இருந்தால் தப்பாக நடந்துக்கொள்வேன் என பகிரங்கமாக கூறிய அந்த நபருக்கு எமிரேட்ஸ் ஊழியர்கள் அந்த பயணம் முழுவதும் மது கொடுத்தார்கள். ஆனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகியும் எமிரேட்ஸ் குழுவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.” என உபாசனா குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.