3700 கிலோ வெடி மருந்து: தகர்க்கப்படும் நொய்டா இரட்டை கோபுர கட்டடம்; மக்களுக்கு எச்சரிக்கை

3700 கிலோ வெடி மருந்து: தகர்க்கப்படும் நொய்டா இரட்டை கோபுர கட்டடம்; மக்களுக்கு எச்சரிக்கை
3700 கிலோ வெடி மருந்து: தகர்க்கப்படும் நொய்டா இரட்டை கோபுர கட்டடம்; மக்களுக்கு எச்சரிக்கை
Published on

நொய்டாவில் அமைந்துள்ள 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடம் நாளை மறுநாள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ள நிலையில் இந்த பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தின் 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர கட்டடம் கடுமையான விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி நாளை மறுநாள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி சுமார் 3700 கிலோ வெடி மருந்துகளை பயன்படுத்தி வெறும் ஒன்பது நொடிகளில் தகர்க்கப்பட உள்ளது.

மிகவும் சவாலான இந்த பணிக்காக பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகர்க்கப்படவுள்ள கட்டடம் அமைந்துள்ள பகுதியில் ட்ரோன்கள் உள்ளிட்டவை பறக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேபோல கட்டடத் தகர்ப்பை ட்ரோன்களை பயன்படுத்தி படம் பிடிக்க நினைப்பவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தகர்ப்பு நடைபெற உள்ள கட்டடத்தின் நுழைவாயிலில் இருந்து 450 மீட்டர் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் 250 மீட்டர் வரை நபர்கள் வாகனங்கள் மற்றும் எந்த ஒரு விலங்குகளும் நுழைவதற்கும் தடை விதித்திருப்பதாகவும் இதற்கு ஏற்றார் போல போக்குவரத்திலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை மறுநாள் மதியம் சரியாக 2.30 மணிக்கு தகர்ப்பு நடைபெற உள்ள நிலையில் நொய்டா விரைவுச்சாலை பகுதியில் 2.15 முதல் 2.45 மணி வரை முழுமையாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் காலை 7 மணிக்கு முன்பாக அங்கிருந்து வெளியேறியிருக்கவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல தகர்ப்பு நடைபெற்றதற்கு பிறகு கடுமையான தூசி உருவாகும் என்பதால் இந்திய விமான படைக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கும் இது தொடர்பான தகவல் பரிமாறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com