உத்தர பிரதேசத்தின் துத்வா புலிகள் காப்பகத்தில் இருந்த ஆட்கொல்லி பெண் புலியொன்று, இனி தன் வாழ்நாளை லக்னோ உயிரியல் பூங்காவில் கழிக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் பின்னணி நம்மை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயம்.
விஷயம் என்னவெனில், இந்தப் புலி கடந்த அக்டோபர் 2020 முதல் இப்போது வரை சுமார் 21 மனிதர்களை கொன்றுள்ளதாம். இந்தப் புலியுடன், மற்றொரு புலியையும் உ.பி.யின் மாநில வனத்துறை பிடித்திருந்தது. காப்பகத்துக்கு அருகே இருந்த கிராம மக்களை இப்புலிகள் தொடர்ந்து தாக்கியதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாக சொல்லப்படுகிறது. இந்தப் புலிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உடல்களின் உதிரிப்பாகங்களை ஜூன் மாதத்தில் சுமார் 10 நாள் இடைவெளிக்குள் வனத்துறை கண்டறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிபட்ட புலிகளில் ஆண் புலி வனப்பகுதிக்குள் விடப்பட்டிருப்பதாகவும், 9 வயதான பெண் புலி வனத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பெண் புலிக்கு, பிடிக்க முயன்ற போது அதற்கு உடலில் சில காயங்கள் ஏற்பட்டதாகவும், அதனால் அப்புலியை தற்போது காப்பகத்திலுள்ள மறுவாழ்வு மையத்தில் விட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆட்கொல்லியாக இப்புலி இருந்துள்ளதால், இதன்மீது அச்சமும் நிலவிவருகின்றது. லக்னோ வனவிலங்கு காப்பக இயக்குநர் இதுபற்றி தெரிவிக்கையில், “காட்டுப்பகுதியிலிருந்து வனவிலங்கு பூங்காவுக்கு வந்துள்ளதால், தற்போதைக்கு இப்புலியை தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அதன் நடத்தையை பொறுத்தே அடுத்தடுத்து முடிவு செய்யப்படும். தற்போதைக்கு அதற்கு சிகிச்சைகள் தரப்பட்டு வருகிறது” என்றுள்ளார்.