கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கென வழிகாட்டு விதிகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ளுங்கள் என சமூக வலைதளங்களில் பதிவுகள் வந்து கொண்டிருப்பதாகவும் இது போன்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும், இது போன்ற வழியில் தத்தெடுப்பது சட்ட விரோதமானது எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகள் கொரோனாவுக்கு தந்தை, தாய் இருவரையும் பறிகொடுத்திருக்கும் பட்சத்தில் அவர்களை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் 24 மணி நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தேவை அடிப்படையில் அதை என்ன செய்வது என்று குழந்தைகள் நல கமிட்டி முடிவெடுக்கும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெற்றோரை இழந்த குழந்தை, உறவினர் பாதுகாப்பில் வளரும் நிலை ஏற்பட்டாலும் அதை குழந்தைகள் நல கமிட்டி கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனாதை குழந்தைகளை தத்தெடுக்க விரும்புபவர்கள் அதற்கென உள்ள மத்திய அரசு அமைப்பை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.