பா.ஜ.க., மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், பாஜக இளைஞர் அணி தலைவர் பாரி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “தம்பி உதயநிதி வரலாறு தெரியாமல் பேசுகிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு பிள்ளையாகவே உள்ளார். சனாதனம் அண்ணா பெரியார் காலத்திலேயே ஒழிக்கப்பட்டது. இங்கு மாற்றங்கள் வந்துவிட்டது. சீர்திருத்த திருமணங்களை நடத்தியவர் அண்ணா, அவர்களது தாத்தா, ஜெயலலிதா, எடப்பாடியார் வரை தற்போது பின்பற்றி வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினிடம் நான் கேட்கிறேன், உங்கள் கட்சியில் தலைவராக தாழ்த்தப்பட்டவரை அருந்ததியரை நிறுத்த முடியுமா.? அண்ணா, பெரியார் கொண்டுவர வேண்டிய மாற்றத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்துவிட்டார். சத்துணவு திட்டம் மூலமாக சமமாக அமர வைத்து உணவளித்தார். எல்லா திட்டங்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்க செய்தார்.
தேர்தலுக்கு தேர்தல் இப்படி பேசி சிறுபான்மை ஓட்டை கவர வேண்டும் என நினைக்கிறார்கள். திமுக 1000 ரூபா கொடுத்தது மக்களிடையே எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கோடியை ரூ.6 லட்சம் பேருக்கு தான் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். மீதி பேருக்கு ஸ்வாக தான். மாணவர்கள் கல்வி கட்டணம் ரத்து, நீட் தேர்வு ரத்து என கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை மறந்து விட்டார்கள்.
பாஜகவுக்கும் எங்களுக்கும் பிரச்னை உள்ளது என யாராவது பேசி இருக்கிறோமா?., அண்ணாவைப் பற்றி மாநில தலைவர் அண்ணாமலை சொன்ன விதம் தவறு என தான் கூறினோம். எங்களுக்கு நட்டா ஜி, அமித்ஷா ஜி, மோடி ஜி, போன்றோருக்கும் பிரச்னை இல்லை. அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளரை மதிக்கிறார்கள். அது போதும். எப்போதும் தீபாவளிக்கு நெய் பலகாரம் சுடுவார்கள் தற்போது நெய் விலையும் உயர்த்தி விட்டார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பத்தாது.
நாங்களும் மோடிஜி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என சொல்கிறோம். இந்தியாவிற்கு பிரதமர் மோடி ஜி தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடியார் என பாஜக அறிவிக்க வேண்டும் . அ.தி.மு.க., கட்சி உலக தரத்தில் ஏழாவது இடத்தில் உள்ளது.
முதலில் உதயநிதி தம்பியிடம் சொல்லி மதுரைக்கு ஏதாவது செய்ய சொல்லுங்கள். கலைஞர் பெயரில் நூலகம் வைப்பது பெருமைதான். ஆனால் மதுரையில் சாலைகள் குண்டு குளியும் ஆக உள்ளது. கொசு தொல்லை இப்படி பல்வேறு அடிப்படைப் பிரச்னைகள் உள்ளது. DMK - D டெங்கு M மலேரியா k கொரோனா. நேற்று உதயநிதி கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஆயிரம் ரூபாயாம். இன்று கறிக்கடையில் எல்லாம் ஓவர் கூட்டம். எல்லாம் உதயநிதி கொடுத்த பணமாகதான் இருக்கும். அடிக்கடி உதயநிதி மதுரைக்கு வர வேண்டும் கூட்டம் நடத்த வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.