இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, கிரிக்கெட்டில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் நிறைய ஃபாலோயர்ஸைக் கொண்டுள்ளார். தவிர, விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதுபோக, வணிகத்திலும் முதலீடு செய்துள்ளார். அந்த வகையில், நவீன ஆடைகளை விற்பனை செய்யக்கூடிய Wrogn என்ற ஃபேஷன் பிராண்டில் விராட் கோலி முதலீடு செய்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் ஆக்ஸெல் (Accel) நிறுவனமும் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. அந்த வகையில், தற்போது ஆதித்யா பிர்லா குழுமம் 16 சதவீத பங்குகளை வாங்கும் பொருட்டு Wrogn என்ற ஃபேஷன் பிராண்டில் 125 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் பிரிவு நிறுவனமான டிஎம்ஆர்டபுள்யு மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், தற்போதைக்கு சிறிய அளவிலான முதலீடு செய்திருப்பதாகவும் எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Wrogn பிராண்டினை பொறுத்தவரை விராட் கோலி முதலீட்டாளராக மட்டுமில்லாமல் நிறுவன விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த நிதி ஆண்டில் Wrogn பிராண்ட் 343 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த பிராண்ட் அடுத்த 5 ஆண்டு காலத்தில் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாறும் என ஆதித்யா பிர்லா குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: AI அழகிப்போட்டி.. Top 10 இடங்களில் இந்திய AI அழகி.. உலகைக் கவரும் சாரா சதாவரி யார்?
ஆதித்யா பிர்லா குழுமத்தை பொறுத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான ஃபேஷன் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமம், அடுத்த 5-7 ஆண்டுகளுக்குள் டிஎம்ஆர்டபிள்யு நிறுவனத்தை மிகப்பெரிய ஃபேஷன் ரீடெய்லராக மாற்றுவதை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிஎம்ஆர்டபிள்யு என்ற ஃபேஷன் நிறுவனத்தை தொடங்கிய ஆதித்யா பிர்லா குழுமம், 444 கோடி ரூபாய் முதலீடு செய்து பல்வேறு ஃபேஷன் பிராண்டுகளிலும் கணிசமான பங்குகளை வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆதித்யா பிர்லா குழுமத்தின் முதலீட்டின் மூலம் இந்த பிராண்ட் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ஆக்செல் நிறுவனத்தின் தலைவர் மகேந்திரன் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.