உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரும் 26 ஆம் தேதி தாஜ்மஹாலுக்கு செல்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா தளங்கள் பட்டியலில் இருந்து உலக அதிசயமான தாஜ்மஹால் நீக்கப்பட்டது. இதனையடுத்து, தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது, அது ஒரு அவமான சின்னம் என அம்மாநில பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவன் கோவிலை இடித்துதான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி. வினய் கட்டியார் என்று கூறினார்.
மேலும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள இடம் ஜெய்பூர் மன்னர்களுக்கு சொந்தமான இடம், அந்த இடத்தை அபகரித்தே தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டினார் என்று கூறியுள்ளார். இந்நிலையில், மேற்கண்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தாஜ்மஹாலுக்கு செல்ல இருக்கிறார். வரும் 26 ஆம் தேதி அங்கு செல்லும் அவர் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் 500 தன்னார்வலர்களுடன் தூய்மைப்பணியை மேற்கொள்ள இருக்கிறார்.