திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம் மற்றும் நிர்வாகத்துக்கு அதானி குழுமம் முறையாகப் பொறுப்பேற்றுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட அதானி குழுமத்தின் உயர் அதிகாரிகள் இன்று அதிகாலையில் விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த பொறுப்பேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதானி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் (ATIAL) இப்போது இந்திய விமான நிலைய ஆணையத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி 50 வருட காலத்திற்கு விமான நிலையத்தை இயக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும் அதானி நிறுவனம் செய்யும்.
ஏற்கெனவே திருவனந்தபுரம் மாவட்டத்தில், 7,525 கோடி மதிப்பிலான விழிஞம் சர்வதேச துறைமுகத்தை உருவாக்கி வரும் அதானி குழுமம், பிப்ரவரி 2019 இல் நடைபெற்ற 89 ஆண்டுகள் பழமையான திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஏலத்தில் வெற்றி பெற்றது. கேரள அரசு நடத்தும் கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (KSIDC) மற்றும் ஜிஎம்ஆர் குழுமம் ஆகியவை இந்த ஏலத்தில் தோல்வியுற்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், கேரள சட்டசபை ஏகமனதாக விமான நிலைய தனியார்மயத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. கேரள அரசின் ஆட்சேபனைகளை புறக்கணித்து விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கான முடிவை மத்திய அரசு எடுத்தது. இந்த முடிவுக்கு தடைக்கோரி கேரள அரசு, கேரள உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.