இந்தோனேசியாவிலிருந்து தரம் குறைந்த நிலக்கரியை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அதை இந்தியாவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு அதானி குழுமம் விற்றதை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது, நாடு முழுவதும் வைரலானது.
இதை ஆதாரமாக வைத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ”பாஜக ஆட்சியில் அதானி நிறுவனம் மிகப்பெரிய அளவுக்கு நிலக்கரி ஊழலில் ஈடுபட்டது அம்பலமாகியிருக்கிறது எனவும், அதானி நிறுவனத்தின் இந்த வெளிப்படையான ஊழல் மீது சிபிஐயோ அல்லது அமலாக்கத்துறையோ, வருமானவரித்துறையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவோம்” எனவும் தேர்தல் பரப்புரையின்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நிலக்கரி ஊழல் விவகாரம் குறித்து சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய மையம், பேங்க் ட்ராக், பாப் பிரவுன் அறக்கட்டளை, கலாசாரம் அசுத்தம், ஈகோ, எக்ஸ்டிங்க்ஷன் கிளர்ச்சி, பூமியின் நண்பர்கள் ஆஸ்திரேலியா, லண்டன் மைனிங் நெட்வொர்க், மேக்கே கன்சர்வேஷன் குழு, சந்தைப் படைகள், பணம், கிளர்ச்சி, நிலக்கரிக்கு அப்பால் நகர்த்துதல், , ஸ்டாப் அதானி, சன்ரைஸ் இயக்கம், டிப்பிங் பாயின்ட், டாக்ஸிக் பாண்ட்ஸ் உள்ளிட்ட 21 சர்வதேச அமைப்புகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.
அதில், ‘இந்தோனேசிய நிலக்கரி இறக்குமதியை அதிக விலைக்கு விற்ற அதானி குழும நிறுவனங்களை விசாரித்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைந்து தீர்த்து வைக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு விற்பதன் மூலம் மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் அனைவரும் உறுதியாக ஒருங்கிணைந்து நிற்கிறோம். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.