தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் எம்.பியும், நடிகையுமான விஜயசாந்தி பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து இருந்து விலகியுள்ள நிலையில், ஜே.பி.நட்டாவை சந்தித்து அவர் பாஜகவில் இணைந்தார்.
1998 ஆம் ஆண்டு முதல் முதலாக பாஜகவில் இணைந்த விஜயசாந்தி, அப்போது பாஜகவின் மகளிரணி செயலாளராக பதவி வகித்தார். அதன் பிறகு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைந்து தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கான போராட்டங்களில் இணைந்தார். இதன்பின்னர் டிஆர்எஸ் கட்சியின் சார்பாக 2009 முதல் 2014 வரை மேதக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
பின்னர் 2014 முதல் காங்கிரஸ் கட்சியின் இணைந்து பணியாற்றிவந்தார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. நேற்று காங்கிரஸ் கட்சியில் தன்னுடைய அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினார் விஜயசாந்தி. இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி.நட்டாவை நேரில் சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் இரண்டாவது பெரிய நட்சத்திர நடிகை விஜயசாந்தி. இதற்கு முன்பாக தமிழகத்தில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்புவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சமீபத்தில்தான் இணைந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.