செய்தியாளர் - தினேஷ் குனகாலா
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தொண்டபர்த்தி பகுதியில் பாலாஜி மெட்ரோ ரெசிடென்சி பிளாட் எண் 102ல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரசாத் பாபு, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி தனது வீட்டின் பீரோவில் இருந்த 1 கிலோ 750 கிராம் எடையுள்ள தங்க நகைகள் திருடு போனதாக போலீசில் புகார் செய்தார்.
இதனையடுத்து, விசாகப்பட்டினம் குற்றப்பிரிவு டிசிபி வெங்கடரத்தினம் தலைமையில் ஏடிசிபி கங்காதர் மற்றும் போலீசார், பிரசாத்பாபு வீட்டில் பீரோவில் உள்ள கைரேகைகளை தடவியல் குழுவினர் உதவியோடு சேகரித்தனர். பின்னர், குடியிருப்பின் வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
வீட்டின் உரிமையாளர் பிரசாத் பாபுவிடமும் நடந்த விவரங்கள் குறித்து கேட்டறிந்த அவர்கள், வீட்டிற்கு சமீபத்தில் வந்து சென்றவர்களின் விவரங்களை கேட்டபோது, 11 பேர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து, 2 தனிப்படை அமைக்கப்பட்டு 11 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர்களில் 3 பேரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில், இன்ஸ்டாவில் வீடியோக்கள், ரீல்ஸ் பதிவு செய்து, அதன் மூலம் புகழ் பெற்று இரண்டு சினிமா படங்களில் நடித்த கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சௌமியாஷெட்டி என்பவர், பிரசாத் பாபுவின் மகள் மெளனிகாவுடன் பழகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அவருடன் பழகிய சௌமியா ஷெட்டி, குடும்பத்தோடு நெருக்கமாகி அடிக்கடி வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்துள்ளார். நேராக படுக்கையறை வரை சென்று அங்குள்ள குளியல் அறைகளையும் பயன்படுத்தி வந்துள்ளார் சௌமியா.
அப்படி செல்லும்போதெல்லாம், மௌனிகாவின் பெட்ரூமை பலமணி நேரமாக பூட்டியபடி உள்ளே இருந்துள்ளார் சௌமியா. இதன் மூலம், வீட்டின் பிரோ சாவி எங்கு இருக்கும் போன்ற விவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்ட சௌமியா, கடந்த ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் மீண்டும் மௌனிகா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்படி சென்றபோது, மௌனிகாவின் படுக்கையறையில் இருந்த பீரோவில் இருந்து தங்க நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 1 கிலோ எடை வரை திருடிச்சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி உறவினர் திருமணத்திற்காக கிளம்பிய மௌனிகாவின் குடும்பத்தினர், பீரோவை திறந்து நகையை எடுக்க முற்பட்டபோது, மொத்தமாக காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சௌமியாவின் செல்ஃபோனை எண்ணை வைத்து கோவாவில் தங்கி இருந்த அவரை கைது செய்து, 74 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள தங்கத்தை மீட்க போலீசார் முயன்று வரும் நிலையில், ‘வலுக்கட்டாயமாக கேட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று போலீசாரை மிரட்டியுள்ளார் செளமியா.
இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர். ரீல்ஸ் மூலம் பிரபலமடைந்த சௌமியா, 2 படங்களில் நடித்த நிலையில், நட்பாக பழகிய தோழியின் வீட்டிலேயே திருடியுள்ளார். தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.