கன்னட திரைப்படத் துறையில் போதைப்பொருள் விவகாரம் பெரும் சூறாவளியை உருவாக்கியுள்ளது. அதனுடன் பல பெயர்கள் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள பூங்கா ஒன்றில் பொதுமக்களால், தான் தாக்கப்பட்டதாக நடிகை சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர் கோமாளி படத்தில் நடித்திருக்கிறார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டு அவர் பேசியுள்ளார். அதில், பெங்களூரு நகரில் உள்ள ஆகாரா ஏரி அருகில் உள்ள பொதுப் பூங்காவில் நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டபோது கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
"முதலில் வயதான ஒரு பெண் அவதூறாகப் பேசத் தொடங்கினார். பின்னர் என்னை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள், போதைப்பொருள் சம்பவத்துடன் சம்பந்தப்படுத்தி சத்தமிட்டனர். அத்துடன் என்னுடைய உடைகளையும் விமர்சித்துப் பேசினர்” எனக் கூறியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் அவர் புகார் செய்தார்.