தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட சில படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மனதில் பிரபலமாக விளங்குபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதற்கிடையே கடந்த சில நாட்களாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ என்று இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதாவது, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பல்வேறு விஷயங்கள் விரல் நுனியிலேயே செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக டிரெண்டிங்கில் உள்ள ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியைப் பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை சுலபமாக மற்றொருவரின் முகத்தை வைத்து மார்பிங் செய்துவிட முடியும்.
அப்படியான வீடியோவைத்தான் தற்போது செய்துகாட்டியிருப்பதுடன், அதை இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், கறுப்பு நிற அரைகுறை உடையில், ராஷ்மிகா மந்தனா (மாதிரி) கதவுகள் பூட்டத் தயாராக இருக்கும் லிஃப்ட்டுக்குள் நுழைவதுபோல இருக்கிறது. இது உண்மை என நினைத்து, அதிலும் ராஷ்மிகா ஆபாசமாக இருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் உண்மையில் இது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்துள்ளது. அது ராஷ்மிகா மந்தனா இல்லை எனவும், அதில் இருப்பது ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ்-இந்தியப் பெண்ணின் வீடியோ எனவும் தெரிய வந்துள்ளது. `AI Deep fake' தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று மாற்றப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “அவர் தான் எப்போதும் என்னுடைய ஹீரோ”- சச்சின் குறித்து எமோஷனலாக பேசிய விராட் கோலி!
அதேநேரத்தில், இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், இதனை மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, ’ நான் வேதனைப்படுகிறேன். இதுகுறித்து பேசுவதற்கு வருத்தமாக உள்ளது. ஆன்லைனில் பரப்பப்படும் இதுகுறித்த வீடியோ பற்றி பேசப்பட வேண்டும். இதுபோன்ற வீடியோ எனக்கு மட்டுமல்ல. இவ்வாறு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், இன்று நம் ஒவ்வொருவருக்கும் பயமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எனக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அதேநேரத்தில் இப்படியொரு விஷயம், நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் காலத்தில் நடந்திருந்தால், இதை எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இதுபோன்ற பாதிப்பால், நம்மில் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, இதை அனைவரும் அவசரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
யார் இப்படிச் செய்தார்கள் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அதேநேரத்தில், AI Deep fake முறையில் பிரபலங்களைச் சித்தரித்து வீடியோ பரப்புவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த காலங்களில் பல பிரபலங்களை வைத்து AI Deep fake முறையில் வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.