18வது மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராய்க் களமிறக்கப்பட்டார். இவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங்கை 74,755 வாக்குகள் வீழ்த்தி அமோக வெற்றிபெற்றார்.
இந்த நிலையில், இன்று மாலை மண்டி தொகுதியில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் ஏறவிருந்தபோது விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர், அவரது கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சண்டிகர் விமான நிலையத்தில் இன்று டெல்லிக்குச் செல்வதற்காக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரால் கங்கனா ரனாவத் சோதனை செய்யப்பட்டார்.
அப்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) கான்ஸ்டபிள் ஒருவர் அவரது கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில், அந்த கான்ஸ்டபிளின் பெயர் குல்விந்தர் கவுர் என தெரியவந்துள்ளது. விவசாயிகளை கங்கனா ரனாவத் அவமரியாதை செய்ததாலேயே அவர் அறைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தற்போது கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தன்னை பெண் சி.ஐ.எஸ்.எஃப். காவலர் தாக்கியதாகவும், அவர் தன்னைத் தாக்கி, தகாத வார்த்தையால் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, ’அவர் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்’ என பதில் அளித்ததாக அதில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பஞ்சாபில் இத்தகைய தீவிரவாத போக்கு அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகவும் கங்கனா ரனாவத் வீடியோ பதிவில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் உள்துறை அமைச்சகத்திடமும் புகார் கூறியுள்ளார்.