தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரது தோழியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய தற்கொலை
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் பாலிவுட் திரையுலகுக்குள் நுழைந்தவர் ஆவார். இவரது நடிப்பில் வெளியான 'தில் பச்சாரா', 'காய் போ சே', 'கேதார்நாத்' உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றன.
இவை அனைத்தையும் விட, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் 'பயோ பிக்' மூவியாக வெளிவந்த 'தோனி' திரைப்படம் தான் இந்தியா முழுவதும் மூலை முடுக்கெல்லாம் சுஷாந்த் சிங்கை கொண்டு சேர்த்தது. இவ்வாறு பாலிவுட் திரையுலகில் உச்சத்தை தொட்டிருந்த சமயத்தில் தான், யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய மும்பை போலீஸார், சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடித்தது. ஆனால், அவர் எந்தக் காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை,
போதைப் பழக்கம்
இதனிடையே, சுஷாந்த் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விசாரித்த போது, அவர் போதைப்பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்சிபி சார்பில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுஷாந்த் சிங்குக்கு நடிகை ரியா சக்கரவர்த்தி கஞ்சா வாங்கிக் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரியா சக்கரவர்த்தியின் தம்பி சோவிக் சக்கரவர்த்தியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இவர்களை தவிர மேலும் 32 பேரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
என்ன தண்டனை?
என்சிபி குற்றப்பத்திரிகையில் ரியா சக்கரவர்த்தி மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.