செய்தியாளர்: ரகுமான்
புதுச்சேரியில் ராஜிவ்காந்தி அறக்கட்டளை சார்பில் ஜவஹர்லால் நேருவின் 60-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேருவின் தேசியக் கொள்கைகள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ரவிக்குமார் எம்.பி, ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது,
“நாட்டின் முதல் பிரதமரை பற்றி இங்கு பேசுகின்றோம். ஆனால், ‘நான் கடைசி பிரதமர், ஆயிரம் வருடம் இருப்பேன்’ என்று ஒருவர் தேர்தல் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார். ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளை பேசவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
நேரு, கல்வி, தொழில் நிறுவனங்கள், அறிவியல் ஆகியவைதான் இந்தியாவுக்கு கோயில் என்றார். ஆனால், இப்போதுள்ள தெய்வமகன் (மோடி), படைத்த கடவுளுக்கே வீடு கட்டி அதற்காக வாக்கு போடு என்று கேட்கின்றார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த நான் தமிழர்களை பற்றி பேசக்கூடாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுவது சரியல்ல.
பிரகாஷ்ராஜ் தமிழனா இல்லையா என்று என்னை செல்லமாக ஏற்றுக்கொண்ட மக்களை கேளுங்கள். நான் கர்நாடாகா காரன்தான். ஆனால், நான் இந்தியன். பல மொழிகளில் என்னை வரவேற்கின்றனர். நான் அருமையாக தமிழ்பேசுவதே தமிழை மதிப்பதால்தான்.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பெற்றதில் பெரிய வரலாற்று போராட்டம் அடங்கியுள்ளது. அதன்படி அண்ணா 41 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தார். அது கருணாநிதி முதல்வரானதும் 49 ஆனது. அதன்பின் எம்.ஜி.ஆர். முதல்வரானதும் 68 சதவிகிதமானது. பின்னர் மீண்டும் கருணாநிதி முதல்வரானதும் 69 சதவிகிதமானது.
அதை மத்திய அரசு 50 சதவிகிதமாக்க முயன்றது. அதைத் தடுக்கவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீதிமன்றம் சென்று அதில் வெற்றி பெற்றார். முன்னதாக நான் பங்கேற்ற நிகழ்ச்சி, மறைந்த முதல்வர் கருணாநிதி சம்பந்தப்பட்ட விழா என்பதால் அவரை நினைவு கூர்ந்து சில தகவல்களை பேசினேன். மற்றபடி ஜெயலலிதாவை குறைத்து பேசவில்லை.
அந்த இடஒதுக்கீட்டில் அனைவரது பங்கும் உள்ளது என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தீபம் எரிவதை விட அதை ஏற்றியது உயர்ந்ததாகும்.
தமிழகத்தில் கோயிலுக்கு செல்வோர் அதிகமிருந்தாலும், அரசியலில் ஆன்மிகத்தை மக்கள் எடுத்துவரவில்லை என்பதை பாஜக தலைவர் அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும்.
காவிரி பிரச்னையை அரசியிலாக்குவது சரியல்ல. காவிரி ஆறு பிரச்னை, மக்கள் பேசும் பிரச்னை அல்ல. காவிரி ஆறு தொடங்கி முடியும் வரையில் மரங்கள் அழிப்பு, ஆக்கிரமிப்பு, மணல் எடுப்பது என பல பிரச்னைகள் உள்ளன. அதனால் ஆற்று நீர் குறைந்துவிட்டது. ஆகவே அறிவியல் பூர்வமாக கர்நாடக, தமிழக அரசுகளை இணைந்து அறிவியலாளர்களின் ஆலோசனையை பெற்று மத்திய அரசு பேசி, பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.
அதனை விடுத்து தமிழனா, கர்நாடகனா என்று பேச வேண்டாம். மொழிக்கும், தண்ணிக்கும் என்ன சம்பந்தம்? காவிரி பிரச்னை வந்தால் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாதிப்பதில்லை. ஆனால், அப்பாவிகள் பாதிக்கும் வகையிலே அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர்.
பிறர் பாக்கெட்டில் இருந்து பணம் எடுப்பதால் காந்தி பற்றி மோடிக்கு தெரியவில்லை. தனது பாக்கெட்டில இருந்து பணம் எடுத்து செலவு செய்தால் காந்தியைப் பற்றி தெரிந்திருப்பார்.
எனக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நான் மக்களோடு இருக்கின்றேன். தற்போது அரசியல் தொழிலாகிவிட்டது” என்று பேசினார்.