நடிகர் மோகன்லால், யானைத் தந்தங்களை வைத்துக்கொள்ள கேரள அரசு அனுமதி அளித்ததில் எந்த விதி மீறலும் இல்லை என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டில் சோதனை நடத்தியபோது, 4 யானைத் தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக மோகன்லால் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், தந்தங்களை வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு கேரள அரசு அனுமதி அளித்ததால் அந்த வழக்கு முடித்துக் கொள்ளப்பட்டது.
இதனிடையே அரசின் உத்தரவுக்கு எதிரான மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கேரள வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், யானை தந்தங்களை வைத்துக்கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு சட்டப்படியே அரசு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.