ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தின்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமான லட்டுவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுக்குறித்த ஆதரங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவாகாரம் கோயிலின் புனிதத்தன்மையை கெடுத்துவிட்டதாக கருதியதால், திருப்பதி கோவிலைப் ‘புனிதமாக்கவும்’, கலப்படம் செய்யபப்பட்ட லட்டு பிரசாத தோஷ நிவர்த்திக்காகவும், கோவிலில் யாக சாந்தி முதலான பல யாகங்களும் சாந்திகளும் நடத்தப்பட்டு, கோயில் முழுக்க கோமியம் தெளிக்கப்பட்டு குங்கிலியப் புகை வீசப்பட்டது. இந்நிலையில் ‘ஏழுமலையானிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கப்போகிறேன்’ எனக்கூறி கடந்த 22 ஆம் தேதி (நேற்று முன்தினம்) முதல் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கி உள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.
இதற்கிடையே சமீபத்தில் திருப்பதி லட்டு குறித்து நடிகர் கார்த்தி ஆந்திராவில் நகைச்சுவையாக பேசிய கருத்தொன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
சம்பவத்தின்படி ஐதராபாத்தில் மெய்யழகன் திரைப்படத்திற்கான தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்வானது நேற்று (செப்டம்பர் 23) நடைபெற்றது. “சத்யம் சுந்தரம்” என்ற பெயரில் தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்வில் நடிகர் கார்த்தி, இயக்குநர் பிரேம் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர், லட்டு தொடர்பான ஒரு மீம்-ஐ பகிர்ந்துவிட்டு “உங்களுக்கு லட்டு வேண்டுமா?” என கார்த்தியை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டார். கார்த்தியும் “இங்கு லட்டு குறித்து பேச வேண்டாம். அது மிகவும் உணர்ச்சிகரமான விஷயமாக இருக்கிறது. லட்டு வேண்டாம்.. இந்த டாபிக்கையே தவிர்த்து விடலாம்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
இந்தக் காணொளி இணையத்தில் வைரலான நிலையில், இன்று காலை 11 மணியளவில் கோவில் பூஜை ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், “சினிமா நிகழ்வு ஒன்றில் லட்டுவைக் கிண்டலடித்துள்ளார்கள். லட்டு சென்சிடிவ் விஷயமாம்.. அப்படி ஒருபோதும் சொல்லாதீர்கள்.. Don't ever try dare to say that. நடிகர்களாக அவர்கள் அனைவருக்கும் நான் மரியாதை கொடுக்கிறேன்.. ஆனால் சனாதான தர்மம் என வரும்போது பேசுவதை ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” என்று எச்சரிக்கையுடன் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து, இருவர் பேசிய பதிவுகளும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரவே... இதற்கு தற்போது நடிகர் கார்த்தி தன் எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், ”அன்புள்ள பவன் கல்யாண் சார், உங்கள் மேல் உள்ள அளவுகடந்த மரியாதையோடு இதை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்பாராதவிதமாக தவறான புரிதல் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் வருத்தம் கேட்டுக்கொள்கிறேன். நானும் வெங்கடேசப் பெருமானின் பக்தன் என்ற முறையில் எப்போதும் நம் பாரம்பரியத்தை கடைபிடிப்பேன்” என்றுள்ளார்.