விவசாயிகளின் பேரணியின் போது செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடி ஏற்றப்பட்டது சர்ச்சையான நிலையில் அங்கு போராட்டத்தை தூண்டியது பஞ்சாப் திரைப்பட நடிகர் தீப் சித்து என்பது தெரியவந்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தேர்தலில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றியவர் தீப் சித்து. பின்னர் விவசாயிகளுக்காக சம்பு மோர்ச்சா என்ற அமைப்பை தொடங்கினார். தற்போது விவசாயிகள் போராட்டம் தொடங்கியது முதலே அதில் தன்னை இணைத்துக்கொள்ள முயற்சித்து வந்தார். ஆனால் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் அவரை புறக்கணித்து வந்தனர். டெல்லியில் காவல்துறையினர் அனுமதியளித்த பகுதியில் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில் தீப் சிங் டெல்லிக்கு உள்ளே பேரணி நடைபெறும் என அறிவித்ததாகத் தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாகவே சில விவசாய சங்கங்களுடன் சேர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே பேரணியை தொடங்கியதுடன், தனது அடியாட்களை வைத்து மத்திய டெல்லி பகுதியில் காவல்துறை அனுமதியளித்த பாதையை விடுத்து, செங்கோட்டையை நோக்கி விவசாயிகளை வழிநடத்தியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
செங்கோட்டையில் மதக்கொடியை ஏற்ற இவர்தான காரணமாக இருந்ததாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தீப் சித்து, தங்களது எதிர்ப்பை காட்டுவதன் அடையாளமாகவே செங்கோட்டையை நோக்கி பேரணி சென்றதாகவும், அங்கு தேசிய கொடியை இறக்கவில்லை என்றும் தங்களுடைய கொடியை மட்டும் ஏற்றியதாகவும் கூறியுள்ளார்.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதவற்காகவோ பொதுச்சொத்துகளை சேதப்படுத்தவோ டெல்லிக்கு செல்லவில்லை என்றும் அவர்களை மதவாத சக்திகள் என கூறக்கூடாது என்றும் தெரிவித்தார்.