விசாரணை அதிகாரியைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், குற்றப்பிரிவு விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
கடந்த 2017-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி ஒருவரை கொலை செய்ய நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து திலீப், அவர் சகோதரர் அனூப் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மூன்று முறை ஒத்திவைத்த கேரள உயர் நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது திலீப் உட்பட 6 பேரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் 27-ஆம் தேதி வரை திலீப்பைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நடிகர் திலீப், கமலச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு முன்பே ஆஜரானார். அவரிடம் இரவு 8 மணி வரை விசாரணை நடத்தப்பட இருக்கிறது.