நடிகர் அக்ஷய் குமார் ஓட்டு போட்டாரா? இல்லையா? என்பது குறித்து ட்விட்டரில் பலர் சர்ச்சை செய்து வருகின்றனர்.
நடிகர் அக்ஷய் குமார் பிரதமர் மோடியை ஒரு நேர்காணல் செய்திருந்தார். அரசியல் தொடர்பு அல்லாத இவரின் பல கேள்விகளுக்கு மோடி பதில் அளித்திருந்தார். இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமாரை ட்விட்டரில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் அவர் மக்களவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தவில்லை என்பதுதான்.
மும்பையில் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. அப்போது பாலிவுட் நடிகர்கள் பலரும் வாக்களித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் நடிகர் அக்ஷய் குமார் தனது வாக்கினை பதிவு செய்யவில்லை. அதேசமயம் அக்ஷய் குமாரின் மனைவி தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ஏன் நீங்கள் வாக்களிக்கவில்லை என அக்ஷய் குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் எந்தப் பதிலும் கூறாமல் சென்றுவிட்டார். இதனையடுத்து ட்விட்டரில் பலரும் அக்ஷய் குமாரை ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர். நீங்கள் வாக்களித்த புகைப்படம் எங்கே.? உண்மையான தேசப்பற்று கொண்ட அக்ஷய் குமார் வாக்களித்தது எப்போது எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த மாதம் வாக்களிப்பதை ஊக்கப்படுத்துமாறு பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார். கூடவே அதை அக்ஷய் குமாருக்கு டேக் செய்திருந்தார். அதில் வாக்கு என்பது மிகப் பெரிய சக்தி. எனவே அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு ட்விட்டரில் பதில் அளித்திருந்த அக்ஷய் குமார், மக்கள் வாக்களிப்தே உண்மையான ஜனநாயகம் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.