தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியல் ஆளுநர் பங்கேற்பதா? வலுக்கும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு
தெலங்கானாவில் நடைபெறும் புஷ்கர விழாவில் பங்கேற்க வரும் 19 ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஞானரத யாத்திரையை தொடங்கவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மயிலாடுதுறையில் உள்ள தருமபரம் ஆதீன மடத்திற்கு சென்ற திராவிடர் கழகத்தினர், திராவிடர் விடுதலைக் கழகத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர், தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மேலும், தங்களது எதிர்ப்பை மீறி ஆளுநரை அழைத்து ஆதீனம் நிகழ்ச்சியை நடத்தினால் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
அதே நேரம் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது பாரதிய ஜனதாவினர் வலியுறுத்தியுள்ளனர். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோரை திரட்டி ஆளுநரை வரவேற்போம் எனக் கூறியுள்ளார்.
அவர் பேசுகையில், “இந்து மதக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநரின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்துள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறோம். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிக்கணக்கானோரை திரட்டி, அனைவரும் ஒன்றுதிரண்டு ஆளுநரை வரவேற்போம்.
தருமபுரம் ஆதீனத்திற்கு பல ஆளுநர்கள் வந்து சென்றபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், இப்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க நீட் தேர்வுக்கான மசோதாவை கிடப்பில் போட்டது, இந்தி - சமஸ்கிருத மொழியை இங்கு அறிமுகப்படுத்துவது உள்ளிட்டவையே காரணியாக இருக்கிறது” என்றார்.