கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், 1996 ஆம் ஆண்டு நடந்த சாம்லெதி வழக்கில் அலிபாத் உள்ளிட்ட நான்கு கைதிகளை விடுதலை செய்தது. இதில் சிறையிலிருந்து வெளியே வந்த அலிபாத், தனது பெற்றோர்களின் கல்லறைக்குச் சென்று கதறியழுதக் காட்சி தற்போது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இது கேட்பதற்கு வழக்கமான நிகழ்வாக இருந்தாலும் அலியின் வாழ்க்கைக்குப் பின் நடந்த சோகக்கதை நீதி சார்ந்த பல கேள்வியை எழுப்பியுள்ளது.
23 வருடங்களுக்கு முன்பு தவ்சா மாவட்டம் சாம்லெதி கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பின் போது ஆக்ராவிலிருந்து பிகானர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும் சிக்கியது. அப்போது பேருந்தில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர், 37 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்துக்கு காரணமான முதன்மை குற்றவாளி அப்துல் ஹமீது உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி முதன்மை குற்றவாளி அப்துல் ஹமீதுக்கு மரண தண்டனை விதித்த கையோடு, பிற கைதிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்தத் தண்டனையை எதிர்த்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதன்மை குற்றவாளி ஹமீதுக்கும் அவர்களுடன் சேர்ந்த ஆறு குற்றவாளிகளுக்கும் குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தது. தற்போது இவர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டாலும் இவர்கள் இதுவரை தண்டனை அனுபவித்த ஆண்டுகள் 23.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் விடுதலை செய்யப்பட்ட ஆறு பேருக்கும் அதற்கு முன் அறிமுகமே கிடையாது. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தது கூட கிடையாது. இது மட்டுமல்ல சிறையில் இருந்த காலத்தில் இவர்கள் பரோலிலோ, பெயிலிலோ ஒரு முறை கூட விடுவிக்கப்படவும் இல்லை. இதில் அலி பாத் என்பவர் சிறையில் இருந்த போது அவர்களது பெற்றோர்கள் இறந்து விட்டனர். அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்குகூட அலிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காலங்கள் கடந்துவிட்டது. பெற்றோர் இன்று உலகத்தைவிட்டு மறைந்துவிட்டனர். ஆனால் அலி பாத்தின் அடிமனதில் அந்த வடு இன்றும் மறையாமல் அப்படியே இருக்கிறது.
இப்போது சிறையிலிருந்து வெளியே வந்த அலி பாத், முதலில் தனது வீட்டிற்கு கூட செல்லாமல், தாய் தந்தை கல்லறைக்கு சென்றார். அந்தக் கல்லறையை அவர் அடைந்தவுடன் துக்கம் தொண்டைய அடைக்க சோகம் தாங்க முடியாமல கதறி அழுதக் காட்சியைதான் நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம். அந்தக் காட்சியை பார்த்த பலர் சோகத்தில் மூழ்கி அவருக்கு ஆதரவாக பேசத் தொடங்கிவிட்டனர்.