காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்து வீசியது ஏன்? என்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம்!

காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்து வீசியது ஏன்? என்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம்!
காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்து வீசியது ஏன்? என்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம்!
Published on

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொன்று சூட்கேஷூக்குள் அடைந்து கழிவுநீர் கால்வாயில் வீசிய கொடூர என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். 

ஐதராபாத்தை சேர்ந்தவர் லாவண்யா (25). மென்பொறியாளரான இவர், கச்சிபவுலியில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருடன் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் சுனில் குமார் (25). இருவரும் காதலித்து வந்தனர். சுனில்குமார், பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். லாவண்யா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சுனிலை வற்புறுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னார். இதை வீட்டில் சொன்னார் லாவண்யா. சுனில் குடும்பத்தினரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய சொன்னார்கள், லாவண்யா குடும்பத்தினர். ஆனால், சுனில் அதை செய்யவில்லை.

’’எனக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்திருக்கிறது. என்னுடன் லாவண்யாவை அனுப்புங்கள். அவளுக்கு அங்கு இன்டர்வியூவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன், 7 ஆம் தேதி திரும்பி விடுவாள்’’ என்று லாவண்யா வீட்டில் சொன்னார் சுனில். இருவரும் காதலிப்பது தெரியும் என்பதால் சரி என்றனர் லாவண்யாவின் பெற்றோர்.

ஐதராபாத்தில் சுனில், எந்த பகுதியில் வசிக்கிறார், அவர் அப்பா யார், முகவரி என்ன என்பது எதுவும் லாவண்யாவின் பெற்றோருக்குத் தெரியாது. இருந்தும் மகள் காதலிக்கிறாளே என்பதற்காக, அனுப்பி வைத்தனர். அதன்படி கடந்த 4 ஆம் தேதி மஸ்கட் செல்வதற்காக லாவண்யாவின் பெற்றோர் அவருடன் ஐதராபாத் விமான நிலையம் வரை சென்று அனுப்பி வைத்துவிட்டு திரும்பிவிட்டனர்.

விமான நிலையம் உள்ளே சென்ற சுனில், ‘இன்று விமானம் கேன்சலாகிவிட்டது. நாளைதான் அந்த விமானம் செல்லும். அதுவரை அருகில் உள்ள ஓட்டலில் தங்குவோம்’’ என்றார். அதன்படி அறை எடுத்து தங்கினர். அங்கு லாவண்யா, திருமணப் பேச்சை எடுத்துள்ளார். பிறகு இரு வருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த சுனில், லாவண்யாவை கழுத்தை நெறித்துக்கொன்றார். பின்னர் சூட்கேஸில் உடலை அடைத்தார். அன்று இரவு, பேருந்தில் உடலை எடுத்துச் சென்றார். பின்னர் கார் சூராரம் என்ற பகுதிக்கு கொண்டு சென்றார். ஆட்கள் யாருமற்றப் பகுதிக்குச் சென்று கழிவுநீர் கால்வாயில் சூட்கேஸை வீசினார்.

பின்னர் மறுநாள் சும்மா இருந்துவிட்டு, 7 ஆம் தேதி, லாவண்யாவின் செல்போனில் இருந்து, ‘’நான் இந்தியா திரும்பிவிட்டேன்’’, ’’அருகில் வந்துகொண்டிருக்கிறேன்’’ என்று அடிக்கடி அவர் சகோதரிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். இரவு வரை, லாவண்யா வீட்டுக்கு வந்து சேராத தால், சந்தேகமடைந்த லாவண்யாவின் சகோதரி, அவருக்கு போன் செய்தார். அது சுவிட்ச்டு ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து லாவண்யாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் செல்ஃபோன் சிக்னலை வைத்து சுனிலை மடக்கிப் பிடித்தனர். அப்போது இந்த விஷயங்களை வாக்குமூலமாக ஒப்பித்துள்ளார் சுனில். அதை ரெக்கார்டு செய்துகொண்ட போலீசார், அவரை அழைத்துச் சென்று லாவண்யாவின் உடலை மீட்டனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட சுனில், சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com