விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த வழக்கு... சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமீன்!

விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த வழக்கு... சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமீன்!
விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த வழக்கு... சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமீன்!
Published on

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சங்கர் மிஸ்ராவுக்கு இன்று, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சக பெண் பயணியின் இருக்கையில் சங்கர் மிஸ்ரா என்ற பயணி சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ரா, பெங்களூருவில் டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவர், கடந்த 11ஆம் தேதி முதல் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதுதொடர்பான விசாரணையில் சங்கர் மிஸ்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்கு பிரிவுகளும், ஜாமீன் வழங்குவதை அனுமதிக்கிறது. எனவே உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கெனவே வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து விட்டதால் மேற்கொண்டு விசாரிக்க எதுவும் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

எனினும் அரசு தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், சங்கர் மிஸ்ராவுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com