மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வெப்பத்திற்கு நடுவே மும்பை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் கூடி இருள் சூழ்ந்து காட்சியளித்தது. தொடர்ந்து கனமழை பெய்ய ஆரம்பித்த நிலையில், திடீரென புழுதி புயல் வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பாந்த்ரா, தாராவி பகுதிகளில் புழுதி புயலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புழுதிப்புயலால் சிறிது நேரம் மும்பை விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், 15 விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. கத்கோபார் பகுதியில் 100 அடி உயரத்திலான ராட்சத இரும்பு விளம்பர பலகை, அருகில் உள்ள பெட்ரோல் பங்க் மீது விழுந்த காட்சிகள் நிலைமையின் வீரியத்தை உணர்த்தின. இதில் சிக்கி 14 பேர் உயிரிழந்த நிலையில், 74 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்ட மகாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதனிடையே விளம்பரப் பதாகை அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளதாகவும், இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது போன்று ஆபத்தை விளைவிக்கக் கூடிய பதாகைகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.