புதிய ஐநூறு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க, அரசு எவ்வளவு ரூபாயை செலவழித்தது என்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதகிருஷ்ணன் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு வரை 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு முன்பு வரை சுமார் ஆயிரத்து 695 கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும், அதற்காக 4 ஆயிரத்து 968 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், புதிதாக அச்சிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு ஆயிரத்து 293 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், 200 ரூபாய் நோட்டுகளை அச்சிட 522 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.