இந்திய விமானி அபிநந்தனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை

இந்திய விமானி அபிநந்தனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை
இந்திய விமானி அபிநந்தனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை
Published on

இந்திய விமானி அபிநந்தனுக்கு இன்று காலை 11 மணிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.

இதையடுத்து இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இந்தப் பதில் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது. அவர் விடுவிக்கப்படுவாரா இல்லையா? என தேசம் முழுவதும் கவலை ரேகை படிந்தது. இறுதியில் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு ஏற்ப அபிநந்தனை நேற்று இரவு இந்திய நேரப்படி 9.10க்கு பாக் ராணுவ அதிகாரிகள் வாகா- அட்டாரி எல்லைப் பகுதியில் ஒப்படைத்தனர். 

அப்போது இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையே பல கட்ட ராணுவ ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. அதன் பின் முறைப்படி அபிநந்தன் இந்திய மண்ணை வந்தடைந்தார். அங்கும் அபிநந்தனுக்கு சில பரிசோதனைகள் நடந்ததாக தெரிகிறது. அதனை அடுத்து இந்திய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் அபி, ஒப்படைக்கப்பட்டதற்கான முறையான அறிவிப்பை தெரியப்படுத்தினர். 

அப்போது அபிநந்தன், கோட் சூட் உடையில் ஒரு உயர் அதிகாரிக்கான தோற்றத்தில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று முறையான மருத்து பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்க் கைதியாக எதிரிநாட்டு ராணுவத்திடம் சிறைப்படுபவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது இதைபோன்ற மருத்துவ ரீதியான உடற்பரிசோதனைகள் நடத்தப்படுவது வாடிக்கை. அதனையொட்டியே அபிநந்தனுக்கு இந்தச் சோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com