ஆயிரம் ஆயிரமாய் சீர்விரிசை: விமர்சையாக தொடங்கிய ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா

ஆயிரம் ஆயிரமாய் சீர்விரிசை: விமர்சையாக தொடங்கிய ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா
ஆயிரம் ஆயிரமாய் சீர்விரிசை: விமர்சையாக தொடங்கிய ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா
Published on

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் திருபட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் அதிக அளவாக 108 கோயில்கள் 108 குளங்கள் அமைந்த பெருமை திருமலைராயன் பட்டினத்திற்கு உள்ளது. இந்நிலையில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடல்வழியாக ஒரு பேழையில் வந்த அம்மனையும், அதிலிருந்த ஓலைச் சுவடியையும் பின்பற்றி ஆயிரங்காளியம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகிறது.

இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் எந்த ஒரு பொருளும் ஆயிரம் எண்ணிக்கையில் வைத்துதான் பூஜை செய்ய வேண்டும் என்ற ஐதிகம் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் ஆயிரம்காளியம்மனை பேழையில் இருந்து எடுத்து இரு தினங்களுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆயிரம்காளியம்மன் கோயில் திருவிழா இன்று அதிகாலை கோலகலமாக துவங்கியது. முன்னதாக திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரர் கோயிலில் இருந்து ஆயிரங்காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்துச் செல்லும் புறப்பாடு நடைபெற்றது.

இதில், அனைத்து வகையான பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் எண்ணிக்கையில் பக்தர்கள் எடுத்து வந்தனர். இதையடுத்து இந்த வரிசை பொருட்கள் அனைத்தையும் ஆயிரங்காளியம்மன் முன்பு வைத்து படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனைக் காட்டப்பட்டு, பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு மட்டுமே பக்தர்கள் அம்மனை தரிசிக்க முடியும். என்பதால் புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவிழாவையொட்டி காரைக்கால் மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்களுக்கு தண்ணீர், நீர் மோர் வழங்கவும், தரிசனம் முடிந்து திரும்பும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கவும் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையின் மூலம் இவற்றை கண்காணிக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் எளிதாக வந்து செல்ல நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியிலிருந்து விழா சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவையொட்டி புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com