'பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை மக்களே முடிவு செய்வர்' - கெஜ்ரிவாலின் புது ரூட் கை கொடுக்குமா?

'பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை மக்களே முடிவு செய்வர்' - கெஜ்ரிவாலின் புது ரூட் கை கொடுக்குமா?
'பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை மக்களே முடிவு செய்வர்' - கெஜ்ரிவாலின் புது ரூட் கை கொடுக்குமா?
Published on

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஸ்திரமான இடத்தை பிடிக்கவேண்டும் என முயற்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு இந்த முறை தேர்தலில் தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களின் முடிவிற்கே விட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் இந்த வித்யாசமான முடிவு அவர்களுக்கு கை கொடுக்குமா?

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்துவரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவிலான அரசியல் இடத்தை பிடிப்பதற்காக கடுமையாக முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக ஹரியானா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தக் கட்சி தேர்தலின்போது போட்டியிட்டாலும், மிக அதிக கவனம் சமீப காலமாக செலுத்திவரும் மாநிலம் பஞ்சாப் ஆகும்.

ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம் ஆகியவை முக்கிய அரசியல் கட்சிகளாக இருந்த நிலையில் கடந்த தேர்தலில் 112 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களை வெற்றி பெற்றிருந்தார்கள்.

இந்த முறை காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் பிரிந்தது, சிரோன்மணி அகாலி தளம் மற்றும் பாஜக இடையிலான நீண்ட நாள் கூட்டணி பிளவு உள்ளிட்ட காரணங்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் எப்படியும் இந்த முறை பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று மிக மும்முரமாக அக்கட்சி வேலை செய்து வருகிறது. இதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் முகாமிட்டு தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை விவசாயிகள் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடிய சூழலில் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை ஆம் ஆத்மி கட்சியினர் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஆளும் கட்சியாக இருந்த போதும் தொடர்ந்து ஆதரவு வழங்கியதை சுட்டிக்காட்டி இந்த தேர்தல் ஒத்துழைப்பு கோரிக்கையை முறையாக செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக பஞ்சாப் முதல்வர் சண்ணியின் தொகுதியில் கூட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்திருந்தார்

இவையெல்லாம் வழக்கமான அரசியல் கட்சிகள் செய்யக் கூடியது தான் என்பதால் எப்பொழுதும் தேர்தல் அரசியலில் வித்தியாசமான நடைமுறைகளை கடைபிடிக்கும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்திலும் இந்த முறை அதனை முயற்சி செய்துள்ளது. மக்கள் தேர்ந்தெடுப்பவர்களே மாநில முதல்வர் என்ற புதிய கோஷத்துடன் தேர்தலை சந்திக்கிறது அக்கட்சி.

கடந்த வாரம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், அலைபேசி எண் ஒன்றை வெளியிட்டு அதில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் யார் முதல்வராக வரவேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ அதுகுறித்த கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதற்கு பொதுமக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 8 லட்சம் பேர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பாக 3 லட்சம் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளும் 4 லட்சம் அலைபேசி அழைப்புகளும் ஒரு லட்சம் குரல் பதிவுகளும் 50,000 குறுஞ்செய்திகளும் முதல்வர் வேட்பாளர் குறித்து பொதுமக்களின் கருத்துகளாக வந்திருப்பதாகவும், இதிலிருந்தே தங்களது கட்சியை பொதுமக்கள் எந்த அளவிற்கு ஆதரிக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அவர்களது கருத்துகளை அனைத்தையும் அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பஞ்சாப் தேர்தல் தொடர்பான முக்கியமான அறிவிப்பாக தங்கள் கட்சி சார்பில் சீக்கியர் ஒருவர் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில் கடந்த வாரம் கூட பஞ்சாப் மாநிலத்தின் மிக முக்கியமான ஆம் ஆத்மி கட்சியின் முகமாக இருக்கக்கூடிய பகவந்த் மன் அவர்களை நான் தனது தனிப்பட்ட முறையில் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று விரும்புவதாகவும எனினும் மக்கள் என்ன மாதிரியான முடிவினை தெரிவிக்கிறார்களோ அதன்படி முடிவெடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்

வரும் ஜனவரி 17ஆம் தேதி மாலை 5 மணி வரை பொதுமக்கள் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என அக்கட்சி ஏற்கனவே அறிவித்து இருக்கக் கூடிய சூழலில், தங்களது இந்த புதிய தேர்தல் முறையினை முக்கியமான தேர்தல் வியூகம் ஆக பஞ்சாப் மாநில தேர்தல் பரப்புரைகளில் அக்கட்சி முன்னெடுத்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் பாஜக, காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகளுக்கு எதிராக ஆம்ஆத்மி செய்து காட்டிய அந்த மேஜிக்கல் மொமண்ட் பஞ்சாப் மாநிலத்திலும் தொடருமா என்பதை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com