மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் சேர்ந்த இரண்டு ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என டெல்லி சட்டப்பேரவை சபாநாயகரை ஆம் ஆத்மி கட்சி அணுகியுள்ளது.
ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்ந்தடுக்கப்பட்டவர்கள் அனில் பாஜ்பாய் மற்றும் தேவேந்திர் ஷெராவத். இவர்கள் இருவரும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக விமர்சித்து வந்தனர். இந்தச் சூழலில் அவர்கள் கடந்த மே மாதம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். இதனால் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் பாஜ்பாய் மற்றும் தேவேந்திர் ஷெராவத் ஆகிய இருவரையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என டெல்லி சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவ்ரவ் பரத்வாஜ் தெரிவித்தார். இதற்கு ஷெராவத் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து தமக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினராக தாம் சேரவில்லை என பாஜக கூட்ட மேடையிலேயே கூறியதாகவும் ஷெராவத் கூறினார். இதனையடுத்து மற்றொரு எம்.எல்.ஏவான பாஜ்பாய் தமக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை எனக் கூறியுள்ளார்.