ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அதிஷிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இந்திய அளவில் 3,54,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11,903 பேர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர்.
இதனிடையே நாட்டின் தலைநகரமான டெல்லியில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 44,688 ஆக உள்ளது. இதில், இன்றைய தேதி வரை 26,351 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 16,500 பேர் இந்த நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 1,837 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள கல்காஜியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான அதிஷி, கொரோனா சோதனை செய்துள்ளார். மருத்துவ முடிவுகள் பாசிடிவ் என வந்துள்ளதாக டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது. அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்திட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அதிஷி ஜி முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். மீண்டும் மக்களுக்கு சேவை செய்வதில் ஈடுபடுவார்” என்று கூறியுள்ளார்.