டெல்லியில் நாளை மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரின் மகன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 5 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நாளை 6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஒருவரின் மகன், அரவிந்த் கெஜ்ரிவால் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
மேற்கு டெல்லி மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுபவர் பால்பீர் சிங் ஜாஹர். இவரது மகன் உதய் ஜாஹர். இந்நிலையில் தன் தந்தை மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுவதற்கான சீட்டை பெற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 கோடி ரூபாய் பணம் செலுத்தியதாக உதய் ஜாஹர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதய் ஜாஹர் கூறும்போது, “ என் தந்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அரசியலில் இணைந்தார். தேர்தலில் சீட் பெற அவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 கோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கினார். என் அப்பா பணம் வழங்கியதற்கு நம்பகத்தகுந்த ஆதாரமே நான் தான்.
ஜனவரியில் தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார். இதற்கு முன் அன்னா ஹசாரே இயக்கத்திலும் கூட என் அப்பா இருந்ததில்லை. அப்படியிருக்க ஏன் என் அப்பாவிற்கு மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 6 கோடி பணம் செலுத்த என் அப்பா ஒப்புக்கொண்டதன் காரணமாகத் தான் சீட்டும் வழங்கப்பட்டது.
அதுமட்டுமில்லால் கடந்த 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவர வழக்கு குற்றவாளியான சஜான் குமாரையும் என் தந்தை பிணையில் எடுக்க முயற்சி செய்தார். எனது படிப்பிற்காக பணம் கேட்டபோது என் அப்பா பணம் கொடுக்க மறுத்தார். ஏனென்று கேட்டதற்கு அந்த பணத்தை அரசியலுக்கு பயன்படுத்தப் உள்ளதாக கூறினார்.” என தெரிவித்தார்.