மகாராஷ்டிர வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகி வருகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் கருத்துக்கணிப்புகளை ஒட்டியே உள்ளது.
பகல் 2.30 மணியளவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 225 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 57 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. கிட்டத்தட்ட முடிவுகள் உறுதிபட தெரிந்துவிட்டது என்றே கொள்ளலாம். மகாயுதி கூட்டணிக் கட்சி அலுவலகங்களில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவின் ஆதித்ய தாக்கரே ஓர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இளைஞர்களை மையமாக வைத்து, நகர்ப்புற வளர்ச்சி என்று குறிப்பிட்டே தனது பரப்புரையை மேற்கொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது அவருக்கு பலமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனெனில், 67,821 சாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தார்.
இவருக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா பிரிவின் மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் சந்தீப் சுதாகர் தேஷ்பாண்டேவும் களத்தில் உள்ளார்.
இதில் மிலிந்த் தியோரா சிவசேனாவில் இணைவதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். இந்தாண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக செயல்பட்டவர் என்பதால் ஓர்லி தொகுதிக்கும் பரிட்சயமானவர். MNS கடந்த 2 ஆண்டுகளாகவே ஓர்லி தொகுதியில் போட்டியிடுவதற்கு தயாராகி வந்தது. வேட்பாளராக சந்தீப் சுதாகர் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்தான் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 16 சுற்றுகளின் முடிவில் ஆதித்ய தாக்கரே 60,606 வாக்குகள் பெற்று, 8408 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஆனாலும், கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இது மிக குறைவான வாக்குவித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.