கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ஹைதராபாத் நகரைச் சேர்ந்த சட்டர் கான் என்பவருக்கு ஆதார் ஆணையத்தின் வட்டார அலுவலகத்திலிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், சட்டர் கான் இந்தியக் குடியுரிமை பெற்றவர் அல்ல எனப் புகார் வந்துள்ளதாகவும், அதனால், அவர் இந்தியக் குடிமகன் என்பதற்கான ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், பிப்ரவரி 20-ஆம் தேதி காலை 11 மணியளவில் (நாளை) ரங்க ரெட்டி மாவட்டத்தின் பாலபுரில், விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று சட்டர் கானிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இந்திய குடியுரிமையை அவர் நிரூபிக்கவில்லை என்றால், அவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர் என்பதாக கொள்ளப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதுகுறித்து நியூஸ் மினிட் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் சட்டர் கானின் வழக்கறிஞர் அளித்த பேட்டியில், “40 வயதுடைய சட்டர் கான் தன்னுடைய இளமை காலம் முழுவதும் ஹைதராபாத்தின் இரண்டு பகுதிகளில் வசித்துள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஹைதராபாத்திலே வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. அவர்கள் 100 சதவீதம் இந்தியர்கள். அவருடைய தந்தை மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றினார். அவரது தாயார் தற்போது பென்ஷன் பெற்று வருகிறார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
சட்டர் கானுக்கு போல பலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பின்னர்தான் தெரிய வந்துள்ளது. ஹைதராபாத் நகரைச் சேர்ந்த 127 பேருக்கு பிப்ரவரி 20-ஆம் தேதி (நாளை) நேரில் ஆஜராகுமாறு வட்டார ஆதார் துணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் ஹைதராபாத் நகரில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய நோட்டீஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக UIDAI எனப்படும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “
ஆதார் என்பது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. ஆதார் சட்டப்படி, ஆதார் அடையாள அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அதற்கு முன்பு 182 நாட்கள் இந்தியாவில் வசித்துள்ளார் என்பதை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களின் அடிப்படையில் 127 பேர் ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ளதாக போலீசார் தரப்பில், ஹைதராபாத் வட்டார அலுவலகத்தில் அறிக்கை அளித்து இருக்கலாம்.
முதல்கட்ட விசாரணையில் தகுதியில்லாத சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆதார் எண்ணைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆதார் எண்கள் ரத்து செய்யப்படும். வட்டார ஹைதராபாத் அலுவலகம் அந்த நபர்களுக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எப்படி ஆதார் பெற்றார்கள் என்பதை உறுதி செய்யுமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை ரத்து செய்வது என்பது ஒரு குடிமகனின் தேசியத்தை ரத்து செய்வதுடன் தொடர்புடையது ஆகாது. ” எனக் கூறப்பட்டுள்ளது.