ஆதார் தகவல் தொகுப்பில் ஊடுருவ முடியாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கோவாவில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் தகவல் தொகுப்புகள் முற்றிலும் பாதுகாப்பானது என்று தெரிவித்தார். ஆதார் அட்டையில் புகைப்படம், பாலினம், நிரந்தர முகவரி ஆகியவற்றைத் தவிர என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய ரவிசங்கர் பிரசாத், கைரேகைகள், கண் விழித்திரை ஆகியவற்றின் மூலம் மட்டுமே மற்ற தகவல்களை அறிய முடியும் என்பதால் ரகசியம் காக்கப்படுவதில் பிரச்னையில்லை என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற ஒப்புதலுடன் இதற்கான கடுமையான சட்டம் உள்ளதாகக் கூறிய அவர், கைரேகை மற்றும் விழித்திரை பதிவை யாருக்காவது அளித்து அது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்த உதவினால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். ஆதார் தகவல்களை அரசு பாதுகாப்பதால், நூறு கோடி முறை முயன்றாலும் அதில் ஊடுருவ முடியாது என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.