இனத்தில் தொடங்கி மத மோதலாக மாறிவிட்டதா? மணிப்பூரில் ஓயாத வன்முறைக்கு பின்னால் இருக்கும் சக்தி எது?

மணிப்பூரில் தொடரும் வன்முறைக்கு இடஒதுக்கீடு தவிர, வேறு என்ன பிரச்னைகள் உள்ளன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்file image
Published on

’பூமியின் சொர்க்கம்’ என்று புகழப்படும் மணிப்பூர்தான், இன்று புகை மண்டலமாய்க் காட்சி தந்துகொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு தொடர்பாக (மெய்டீஸ் இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைத்தால் தங்களுக்கான இடஒதுக்கீடு அவர்களால் பறிக்கப்படும்; அவர்கள் தாங்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி தங்களை வெளியேற்றக் கூடும் என குக்கி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.) மணிப்பூரில் ’குக்கி’ என்ற பழங்குடியினத்தவருக்கும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய வன்முறை, இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சம்.

இந்த வன்முறையில் இதுவரை, 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 350க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும், இன்னும் பலர் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பாமல் 300க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்படிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் விவரிக்கின்றன. இதற்கிடையே தொடர்ந்து அங்கு இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்து வருவது அம்மாநில மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் வீடுகள், தேவாலயங்கள், பள்ளிகள், கோயில்கள், வணிக வளாகங்கள், விவசாய நிலங்கள் என அனைத்தும் தீக்கிரையாகி உள்ளன.

இதனால் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், குழந்தைகளின் கல்வி போன்றவை பாதிக்கப்பட்டிருப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த 10 கட்சிகள் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. தவிர, இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளன. ஆனால், இவை எதற்குமே முடிவில்லாமல் உள்ளன.

இந்த நிலையில், இரு வேறு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டு வந்த சண்டை, தற்போது மதக் கலவரமாக மாறியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மணிப்பூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ”மணிப்பூரில் மெய்டீஸ், நாகா, குக்கி இன மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். எனினும், கடந்த காலங்களில் இவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்துள்ளனர். இவர்களுக்குள் எந்த மோதலும் வெளிப்பட்டதில்லை. ஆனால், சமீபகால வன்முறைக்குப் பின்னால் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் இந்த சமூகத்தினரை மதரீதியாகவோ அல்லது சாதிரீதியாகவோ தூண்டிவிட்டிருக்க வேண்டும்” என்கிறார்.

அவர் சொல்வதை வைத்துப் பார்க்க வேண்டுமானால், அங்கு ஏதோ தவறு நடந்திருப்பதாகவே அரசியலாளர்களும் அறிவுறுத்துகின்றனர். அதாவது மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி இன பழங்குடி மக்கள், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியவர்களாக உள்ளனர். இவர்களுக்குத்தான் இடஒதுக்கீட்டில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மெய்டீஸ் இன மக்களில், சில பட்டியலின பிரிவினராகவும், வேறு சிலர் பிற்படுத்தப்பட்டோராகவும் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். இந்தச் சமூகத்தினர்தான் இடஒதுக்கீடு கேட்டுப் போராடி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் குக்கி இன மக்கள் போராடுகின்றனர். இதுதான் மெய்டீஸ் மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. இதை மையமாக வைத்து, இந்து - கிறிஸ்தவ என்கிற மதரீதியான பிரச்னை அங்கு வெடித்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக மணிப்பூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வன்முறையில், மெய்டீஸ் இன மக்களின் வழிபாட்டுத்தலங்களும், குக்கி இன மக்களின் தேவாலயங்களும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது போட்டிக்குப் போட்டியாய் இருதரப்பும் தங்களுடைய புனித ஸ்தலங்களை வேட்டையாடியுள்ளன. இதனால் இது மதரீதியான மோதலே என்கின்றனர், அவர்கள்.

”இன்னும் சொல்லப்போனால், இந்துக்களின் கோயில்களைவிட, கிறிஸ்தவர்களின் தேவாலயங்களே அதிகமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாத தொடக்க ஆய்வின்படி, 250 தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தவிர, குக்கி இன மக்கள் வசிக்கும் 2,000 வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆக, இடஒதுக்கீடு என்கிற பெயரில் இருவேறு சமூகத்தினரிடையே இந்த மோதல் நடைபெறவில்லை. இரு மதத்தினரிடம்தான் இந்த வன்முறை நடைபெற்றுள்ளது. அதனால்தான் இதற்கு இன்றைய நாள் வரை தீர்வு கிடைக்கவில்லை” என்பது, அங்குச் சென்று ஆய்வு நடத்திய ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

குக்கி இன மக்களின் கிறிஸ்தவ தந்தையான ஒருவர், “கிறிஸ்தவர்களின் நலன்களையும், தேவாலயங்களின் மீதான தாக்குதலையும் தடுக்க அரசு தவறிவிட்டது. எங்கள் சொத்துக்கள் அழிவதை வேடிக்கை பார்க்கிறது. இது, சாதிய வன்முறையாகவே தெரிகிறது. இந்து மக்களைக் கவர தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், ”மணிப்பூர் பிரச்னைகள் மதரீதியிலானவை கிடையாது. காரணம், மணிப்பூரில் பல இன மக்கள் இருக்கிறார்கள். உரிமைக்கான போராட்டம், மதரீதியிலானது என்பதில் உண்மையில்லை” என்பதும் மற்றவர்களின் கருத்தாக இருக்கிறது. 250 தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், 1,000 இந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனவே, இருதரப்பிலும் சேதம் சரிசமமாக கருதப்படுவதாகவே சொல்லப்படுகிறது.

இவையெல்லாம், ஊடகச் செய்திகள்தானே தவிர, அங்கு நடைபெறும் வன்முறைக்கு உண்மையில் என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. உறைவிடங்களும், உயர்ந்த கட்டடங்களும் உடைந்தபடி இருக்கின்றன. உறங்கிய விழிகள் எல்லாம் இன்று உறங்காமல் ஒவ்வொரு பொழுதையும் கழித்துக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் அமைதியாய் மணிச் சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்த மணிப்பூர், வன்முறைக்குப் பிறகு அந்த மண்ணின் மணியையே இழந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com