லஷ்கர் இயக்கத்துடன் தொடர்பு?: கேரளாவில் ஒருவர் கைது!
தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய புகாரில் பெண் உள்பட 2 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. குறிப்பாக பயங்கரவாதிகள் கோவைக்குள் நுழைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கிய மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். மேலும் அவருடன் தொலைபேசி வாயிலாக தொடர்பில் இருந்த புகாரில் சென்னை, கோவையை சேர்ந்த ஒருவர் உட்பட மூவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அப்துல் காதர் ரஹீம் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ரஹீம் சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் ரஹீமுக்கு எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.