பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சில பாடங்களில் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பர். அதேநேரத்தில் விருப்பமில்லாத பாடங்களில் அக்கறை காட்ட மாட்டார்கள். அதிலும் அறிவியல், கணிதம், ஆங்கிலம் என்றால் சொல்லவே வேண்யதில்லை. கணிதத்தின் ஃபார்முலாக்களை அவர்கள் மனப்பாடம் செய்வதிலேயே தலைசுற்றி கீழே விழுந்துவிடுவர். அடுத்து அறிவியல் பாடத்தில் விதிகளை மனப்பாடம் செய்யும்போது மாணவர்களுக்கு பதற்றம் நிலவும். தவிர, அந்தப் பாடத்தில் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கும் சம்பவங்களும் நிகழும். இதனால் படம் வரைவதிலும் சிரமப்படுவர்; பாகங்களை எழுதுவதிலும் சிரமப்படுவர்.
அப்படித் தவிப்பவர்களுக்கு மத்தியில் இணையத்தில் ஒருவர் இதயம் படத்தை வரைந்து, அதற்குப் பொருத்தமான பெயர்களுடன் செயல்பாடுகளையும் நகைச்சுவையுடன் எழுதியிருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எந்தவொரு பள்ளியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை முழுமையாக இல்லை.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், மனித இதயம் பற்றிய படத்தை வரைந்திருக்கிறார். அவற்றின் அறைகள் குறித்த பெயர்களுக்கு ஹரிதா, பிரியா, பூஜா, நமீதா மற்றும் ரூபா என மாணவிகளின் பெயர்கள் மற்றும் அவர்களை பற்றிய குறிப்புகளை நகைச்சுவையாக எழுதியுள்ளார். தவிர, அப்பெயர்களுடன் இதயத்தின் செயல்பாடுகளை நகைச்சுவையுடன் விவரித்துள்ளார்.
இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மே 13 அன்று பகிரப்பட்ட நாள்முதல் இதுவரை, 64.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ளது. தவிர, நெட்டிசன்களின் பதிவுகளையும் பெற்று வருகிறது.
இந்த வீடியோவில் வரும் இதயம் வரைபடம் நிச்சயம் போலியானது என்றும் திட்டமிட்டு வைரல் ஆவதற்காகவே தயாரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆசிரியரின் கையெழுத்தும், மாணவரின் கையெழுத்தும் ஒன்றும்போல் இருப்பதாக பலரும் பதிவிட்டுள்ளனர். இருப்பினும் இதயம் வரைபடத்தை அழகாக வரைந்திருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர்.
இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. மேலே இருக்கும் அறைகள் ‘இடது ஆரிக்கிள்’, ‘வலது ஆரிக்கிள் ‘என்றும் கீழே இருக்கும் அறைகள் ‘இடது வென்ட்ரிகிள்’, ‘வலது வென்ட்ரிகிள்’ என்றும் அழைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.