18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பெருத்த எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கி இருக்கிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 240 தொகுதிகளை கைப்பற்றியது. ஆயினும் மத்தியில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் கிடைக்கப்பெறாத நிலையில், பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றிருந்த கூட்டணிக் கட்சிகள் எம்பிக்களின் எண்ணிக்கையையும் தற்போது நடைபெற்ற தேர்தலில் தேர்வாகியிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் இங்கே பார்க்கலாம்.
கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக கூட்டணி 336 இடங்களையும் காங்கிரஸ் 59 இடங்களையும் பிற கட்சிகள் 148 இடங்களையும் பெற்றிருந்தன.
அதுபோல் கடந்த 2019இல் பாஜக கூட்டணி 351 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களையும் பிற கட்சிகள் 102 இடங்களையும் பெற்றிருந்தன.
தற்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களையும் பிற கட்சிகள் 16 இடங்களையும் பெற்றுள்ளன. இதில் கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பாஜக தனிப் பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.