நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் என்கிற நிலையில், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடியுரிமை திருத்தச் சட்டம் Citizen Amendment Act (CAA) நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்த அறிவிக்கையையும் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதற்கு, மீண்டும் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த 2019 டிசம்பர் 11இல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் மறுநாளே ஒப்புதல் அளித்தார். பின்னர், 2020ஆம் ஆண்டே இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தற்போது மத்திய அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதாவது வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் ஆகிய 6 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் குடியேற குடியுரிமை பெற முடியும். இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாடு முழுமைக்குமானது. சில மாநிலங்கள் எதிர்த்தாலும், மத்திய அரசு நினைத்தால் இது அமல்படுத்தக்கூடிய ஒன்றுதான்.
ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேடு National Register of Citizens (NRC)என்பது அசாம் மாநிலத்துடன் மட்டுமே தொடர்புடையது. அசாமின் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவின்படி இது கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுப்பைத் தொடங்கியது. ஆக, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) ஆகிய மூன்றும் குடியுரிமை என்ற அம்சத்தின்கீழ் ஒரே தொடர்பில் வருவதை அறியலாம். அதாவது, இந்த மூன்று அம்சங்களும் ஒன்றையொன்று தொடர்புகொண்டுள்ளதாகக் கணிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்த மூன்று அம்சங்களும் சொல்வது என்ன, அவற்றுக்குள் இருக்கும் தொடர்புகள் என்ன, வேறுபாடுகள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஏற்கெனவே குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி (CAA) மேலேயே கூறிவிட்டதால், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பற்றி அறிவோம். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது மத அடிப்படையிலானதல்ல. அது சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் சம்பந்தப்பட்டது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமான அளவில் குடியேறியதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. 1951ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிட்ட பிறகு இந்திய குடிமக்களைக் கண்டறியவும், அப்போது பாகிஸ்தானின் பகுதியாக இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களைக் கணக்கெடுக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பணியில், 1951ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றவர்கள் அல்லது 1971ஆம் ஆண்டு மார்ச் 24ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தியாவில் வசித்து, வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஒவ்வொருவரிடமும் சான்றுகள் கேட்கப்படும். அவ்வாறு சான்றுகள் இல்லையென்றால் அவர்கள் வெளிநாட்டினராகக் கருதப்பட்டு ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட வாய்ப்புண்டு. இதன் கணக்கெடுப்புகள் முடிவடைந்து, ஏறத்தாழ 19 லட்சம் மக்கள் (19,06,657) குடியுரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஏறத்தாழ 7 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஏற்கெனவே இரண்டு முறை தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதில் லட்சக்கணக்கானோர் பெயர்கள் விடுபட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடைசியாக 2019, ஆகஸ்ட் 31ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது.
அப்படி வெளியிடப்பட்ட இறுதிப்பட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டதும் பேசுபொருளானது. அதேநேரத்தில், மற்ற மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படும் எனக் குடியுரிமை சட்டம் (தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட சட்டம்) உறுதியளிப்பதால், இந்த 7 லட்சம் முஸ்லிம்களும் தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கப்படுவர். மேலும், என்ஆர்சி மூலமாக 1948 ஜூலை 19க்குப் பிறகு இந்தியாவில் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு, அவர்களை நாட்டைவிட்டு, வெளியேற்றும் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேற்கண்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இரண்டு முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். முதலாவதாக, முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. இரண்டாவதாக, சட்டவிரோத வெளிநாட்டினரை, பெரும்பாலும் முஸ்லிம்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் கணக்கிடப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன. அஸ்ஸாமை தாண்டி நாடு முழுமைக்கு NRC மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாஜக அரசு தொடர்ச்சியாக சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
இவையிரண்டும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு National Population Register (NPR) குறித்த கேள்வியும் எழுப்பப்படுகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது நாடு முழுவதும் வழக்கமான குடிமக்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்படுவது ஆகும். இதற்கான தகவல்கள் 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் மற்றும் 2003ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிமுறையின்கீழ் பெறப்படும். தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, சென்சஸ் கணக்கெடுப்பைப்போல மற்றொரு கணக்கெடுப்புதான் எனக் கருதலாம். இன்னும் சொல்லப்போனால், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது பல்வேறு விதமான மக்கள் யார்யார் என்பதை உறுதிசெய்வது மட்டும்தான். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மக்களின் கல்வித்தகுதி, வீடு, சொத்து, அவர்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரச் சூழல் போன்ற விவரங்களைச் சேகரிப்பதாகும். ஆனால் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் விவரம் அளிப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளிப்பதோடு, தங்கள் பெற்றோர் பிறந்த இடத்தைக் குறிப்பிட வேண்டும் எனவும் கூறுகிறது.
இதில் தாய் மற்றும் தந்தையர் பற்றிய விவரம் இடம் பெறும்போது, அவர்கள் உடன் வசிக்கிறார்களா அல்லது வேறு இடத்தில் வசிக்கிறார்களா என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருக்கும் ஊரைக் குறிப்பிட வேண்டும். எந்த மாநிலம், எந்த நகரம் என்பதையும் அவர்களது பிறந்த தேதியையும் தெரிவிக்க வேண்டும். என்பிஆர் கணக்கெடுப்பின்போது எந்தச் சான்றும் தரவேண்டிய அவசியம் இல்லை. தனது சுய விவரக்குறிப்புத் தகவல்களை ஒருவர் தந்தால் போதுமானது. இது ஒருவகையில், இந்தியக் குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு எனவும் பதிவு செய்யப்படும். இது, மாநிலப் பதிவேடு, மாவட்டப் பதிவேடு, துணை மாவட்டப் பதிவேடு, ஊரகப் பதிவேடு எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படும். ஊரகப் பதிவேட்டின்கீழ் சேகரிக்கப்படும் தகவல்கள் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் (NPR) சரிபார்க்கப்படும். சரிபார்த்து, இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்வரை, 'சந்தேகத்திற்குரிய குடியுரிமை' என்ற புதிய வகை உருவாக்கப்படும். இந்தப் புதிய வகையினர் இறுதிப்பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்ள, தாங்கள் இந்திய குடிமக்கள்தான் என நிரூபிக்க வேண்டும்.
மேற்கண்ட 3 அம்சங்களிலும் மக்கள் பற்றியும் அவருடைய குடியிருப்புகள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. ஆக, தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மூல ஆதாரமாக தேசிய குடிமக்கள் பதிவேடும், தேசிய மக்கள்தொகைப் பதிவேடும் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த சட்டம் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டால், அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏற்படும் என்பதாலேயே சில மாநில முதல்வர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி இந்த சட்டம் ஒதுக்குவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.