’நீரின்றி அமையாது உலகு’ எனச் சொல்லப்படுவது உண்டு. ஆனால், அந்த நீரையே காணாத நிலையையும் அந்த நீருக்காகத் தேடி ஓடும் மனிதர்களையும் நாம் தினம் கண்முன்னால் பார்க்கிறோம். ஒருகாலத்தில் சோமாலியாவும், மெக்சிகோவும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டன. அடுத்து பாதிக்கப்பட்ட நகரங்களில் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரமும் ஒன்று.
இதையடுத்தே, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்று சொல்லப்படும் பெங்களூருவும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நாவால் எச்சரிக்கை விடப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொழியாததால் பெங்களூருவுக்கு நீரை வழங்க முடியாமல் மாநகராட்சியின் நீர் விநியோக வாரியம் திணறி வருகிறது.
உண்மையைச் சொல்லப்போனால், பெங்களூருவைச் சேர்ந்த கர்விதா குல்ஹாட்டி என்று சிறுமி, உலகெங்கிலும் உள்ள உணவகங்களில் அரைகுறையாகக் குடித்த தண்ணீர் மட்டும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 14 மில்லியன் லிட்டர் அளவுக்கு வீணாகுவதாகத் தெரிவித்திருந்த அவர், தண்ணீரின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வையும் தொடங்கினார். ஆனால், அதை, அரசும், மக்களும் உணரத் தவறியதால், இன்று அந்த நகரமே தண்ணீர்ப் பஞ்சத்தால் தலைவிரித்தாடுகிறது. இமயம் முதல் குமரிவரை இதுபற்றிய பேச்சுகளே அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறது.
தண்ணீர்ப் பஞ்சத்தின் தாக்கம் பெங்களூருவில் உள்ள சாமானிய மக்களுக்கு மட்டுமில்லாமல், முதல்வர் சித்தராமையாவின் அரசு அலுவலக இல்லமான கிருஷ்ணா, துணை முதல்வரின் அரசு இல்லம், சில அமைச்சர்களின் வீடுகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் 236 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதில், 219 தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வரும் கோடைக்காலம் மிக தீவிரமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா முழுவதும் 7,082 கிராமங்கள், பெங்களூரு நகரம் உட்பட 1,193 வார்டுகளில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. வருவாய் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் துமகூரு முதலிடம் வகிப்பதாகவும், இங்குள்ள 746 கிராமங்கள் அபாய நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. அதேபோல உத்தர கன்னடா மாவட்டத்திலும் பல கிராமங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு நகரிலும், 120க்கும் மேற்பட்ட வார்டுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக பெங்களூரு மக்கள் அன்றாட பணிகளைச் செய்துகொள்வதில்கூடச் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, சில குடியிருப்புகளில் கழிப்பறை செல்வதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். குடிக்க, கைகழுவகூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படுகின்றனர். இதனால் அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களில் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் 20 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் தனியார் பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவுரை வழங்கி உள்ள நிலையில், பெங்களூருவில் தோட்டம், கார் கழுவுதல், கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மேலும், தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்தும் குடியிருப்பாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு ஒயிட் ஃபீல்ட்டில் உள்ள தி பாம்மெடோஸ் லே அவுட் குடியிருப்புவாசிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நோட்டீஸில், ‘கடந்த சில வாரங்களாக பெங்களூரு நீர் விநியோக வாரியம் நீர் வழங்கவில்லை. ஆழ்துளை கிணறுகள் வற்றியுள்ளதால் அதன்மூலம் நீர் கிடைப்பதும் சிக்கலாகியுள்ளது. எனவே ஆயிரக்கணக்கில் செலவழித்து டேங்கர் லாரி மூலம் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீரை குடியிருப்புவாசிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரை தவறாகப் பயன்படுத்தினாலோ, வீணடித்தாலோ குடியிருப்புவாசிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதற்காக நிர்வாகம் தனியாக கண்காணிப்பாளரை நியமனம் செய்துள்ளது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிலைமையைச் சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தண்ணீர் லாரி விநியோகத்தை முறைப்படுத்துவது, அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மறுசுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவது உள்ளிட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. நிலைமையை சமாளிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் எம்எல்ஏக்கள் தலைமையில் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
பொதுவாக பெங்களூரு நகரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பதே ஆகும். குறிப்பாக, பெங்களூருவில் மட்டும், 3,000க்கும் அதிகமான போர்வெல்கள் வற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை துணை முதல்வர் டி.கே.சிவகுமாரே ஒப்புக்கொண்டுள்ளார்.
அது தவிர நிலத்தடி நீர் குறைவு, உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமை, நகரமயமாக்கல், மழைப் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம், மக்கள் தொகை உயர்வு, நீர்நிலைகளின்மீது கட்டடம், மழைநீர் சேகரிப்பு இன்மை, நிலத்தடிநீர் வீணடிப்பு, பராமரிக்கப்படாத குடிநீர்க் குழாய்கள், நீர்க்கசிவு, குழாய்களில் திருட்டு இணைப்புகள்... இப்படி பல காரணங்களை அம்மக்கள் எடுத்துரைக்கின்றனர்.
1.3 கோடி மக்கள்தொகை கொண்ட பெங்களூரு நகரத்தில் 60 சதவிகிதம் பேர் டேங்கர் லாரி தண்ணீரை நம்பியுள்ளனர். அதன்படி, தினம்தோறும் 2,600 முதல் 2,800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினசரி வழங்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால், தற்போது 1,500 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே தினசரி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பெங்களூருவில் காவிரியில் இருந்து ஒருநாளைக்கு சுமார் 1,450 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீரைப் பெறும் அதேவேளையில், நகரம் இன்னும் ஒருநாளைக்கு 1,680 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்தப் பற்றாக்குறைதான் தண்ணீர்ப் பிரச்சனைக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது.
இதில், 1,500 மில்லியன் லிட்டர் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தண்ணீர் லாரிகளின் விலை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரித்து உள்ளது. பெங்களூரில் 200க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 5 கி.மீ., தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்ய, 6,000 லிட்டர் லாரிக்கு 600 ரூபாய் என்றும், 8,000 லிட்டர் லாரிக்கு 700 ரூபாய் என்றும், 12,000 லிட்டர் லாரிக்கு 1,000 ரூபாய் விலை மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போதைய தண்ணீர்ப் பஞ்சத்தால் இதன் விலை அதிகரித்திருப்பதாகப் பொதுமக்கள் புகார் வாசித்துள்ளனர்.
குறிப்பாக 12,000 லிட்டர் லாரிக்கு 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 6,000 லிட்டர் லாரிக்கு 1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் டேங்கர் லாரிகள் இரண்டு மடங்கு விலையை ஏற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் அதைப் பெறுவதற்காக, முன்பதிவு செய்துவிட்டு 5 நாட்கள் மேலும் காத்திருப்பதுதான் அவர்களின் கண்ணீராக உள்ளது.இது ஒருபுறமிருக்க, பணம் படைத்த பெருமுதலாளிகள் சிலர், லட்சக்கணக்கில் செலவு செய்து ஆயிரமடியில் போர்வெல் போட்டும் எந்தப் பயனுமில்லை. அவர்களின் குடும்பத்தில் இருக்கும் கண்ணீரில் இருக்கும் நீரின் அளவுகூட, நிலத்தடியில் இல்லாததால் மிகுந்த கவலைக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
முக்கியமாக தண்ணீரின் அளவைச் சிக்கனமாய்ப் பயன்படுத்த வேண்டும். வீடுகள் மற்றும் பொது இடங்களில் உள்ள கசிவுகள் மற்றும் சொட்டு குழாய்களை சரிசெய்ய வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள பகுதிகளில், தண்ணீரின் அளவை அதிகரிக்கச் செய்யவும், அதிகளவு உறிஞ்சப்படுவதைக் கண்காணித்து அதனைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மழைநீரைச் சேமிப்பு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு சொட்டு நீர் பாசனத்தை நடைமுறைப்படுத்தலாம். வறட்சியைத் தாங்கும் தாவரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பயிரிடலாம்.